Monday, 8 September 2025

தீண்டாமை சுவர்...

புதுக்கோட்டை ஒன்றியம் இச்சடி அண்ணாநகரில்  தீண்டாமை சுவரை உடனே அகற்றுக 

புதுக்கோட்டை,  செப். 6-  புதுக்கோட்டை மாவட்டம், புதுக்கோட்டை ஒன்றியம், இச்சடி கிராமத்தில் பட்டியல் சமூக மக்கள் வசித்து வரும் அண்ணாநகரில் ரியல் எஸ்டேட் நிறுவனத்தினர், தாங்கள் போட்டுள்ள வீட்டுமனைகள், பட்டியல் சமூக மக்கள் வசிக்கும் பகுதி என்பதால் விற்பனை ஆகவில்லை என பட்டியல் சமூக மக்களின் வசிப்பிடங்களை மறைத்தும், சாலையை மறித்தும் நீண்ட சுவரை எழுப்பியுள்ளனர்.  இதுகுறித்து நேரடியாக தீண்டாமை ஒழிப்பு முன்னணி, மற்றும் சிபிஐ(ம்) சார்பில் களத்தில் ஆய்வு செய்யப்பட்டது. கள ஆய்வில் பட்டியல் சமூக மக்கள் வசிக்கும் பகுதியில் மட்டும் சுவர் எழுப்பபட்டிருப்பது தெரியவந்தது. அப்பகுதி மக்கள் தீண்டாமை நோக்கத்தோடு, நாங்கள் வசிக்கும் பகுதி என்பதால், வீட்டுமனை விலை போகவில்லை என்று சொல்லி, ரியல் எஸ்டேட் நடத்தும் நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் இவ்வாறு சுவர் எழுப்பியுள்ளதாகக் கூறினர்.  குளங்கள், கோவில்கள் ஆக்கிரமிப்பு அதோடு, பட்டியல் சமூக மக்கள் குளிக்கும் வணணான் குளம், முருகன் கோவில் குளம் உள்ளிட்ட வரத்து வாரிகள் அனைத்தும் வேறு ஒரு தனி நபரால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. அதேபோல், காலம்காலமாக பட்டியல் சமூக மக்கள் வழிபட்டுவரும் ஸ்ரீ செந்தில்நாதன் கோவில், இந்து சமய அறநிலையத்துறையின் மேம்பாட்டு நிதியில் கிராமக் கோவில்கள் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வழிபாடு செய்து வருகின்றனர். இதனையும் சேர்த்து தனிநபர் சட்ட விரோதமாக லாரி லாரியாக மண்ணை நிரப்பி மூடிவருகிறார்.  இதனால் அக்கோவிலுக்குச் சென்று வழிபாடு செய்ய செல்லமுடியாமல் மக்கள் தடுக்கப்பட்டுள்ளனர். இதன் மீது காவல் துறையிலும், வருவாய்த் துறையிலும் புகார் கொடுக்கப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படாமல் உள்ளது.  களத்திற்கு நேரில் சென்று ஆய்வு நடத்திய பிறகு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர், எஸ்.சங்கர், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டச் செயலாளர் எஸ்.கவிவர்மன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் டி.சலோமி, மாவட்டத் தலைவர் சி. அன்புமணவாளன், மாவட்டக் குழு உறுப்பினர் டி. லட்சாதிபதி, மாவட்ட துணைத் தலைவர்கள் எம். அசோகன்,  எம்.ஏ. ரகுமான், தென்றல் கணேசன், கட்சியின் ஒன்றியச் செயலாளர் செந்தில்ராஜ், ஒன்றியக் குழு உறுப்பினர் கூறுப்பட்டி ராஜா ஆகியோர், மாவட்ட நிர்வாகமும், வருவாய்த் துறையும் உடனடியாக தலையிட்டு இச்சடி அண்ணாநகர் பட்டியல் சமூக மக்களின் குடியிருப்பையும், சாலையையும் மறைத்து கட்டப்பட்டுள்ள தீண்டாமைச் சுவரை அப்புறப்படுத்த வேண்டும். காலம் காலமாக பட்டியல் சமூக மக்களின் பயன்பாட்டில் இருந்த குளங்கள், வரத்து வாரிகள், கோவில் ஆகியவற்றை மீட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர். கோரிக்கை நிறைவேற்றப்படாத நிலையில் கட்சியின் சார்பிலும், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி, மற்றும் அண்ணாநகர் பொதுமக்களை திரட்டி போராட்டம் நடத்தப்படும் என மாவட்டச் செயலாளர் எஸ்.சங்கர் தெரிவித்துள்ளார்.

Tuesday, 26 August 2025

(27.08.2025 தீக்கதிர்)

வீரவணக்கம்   தமிழ் திரைப்படம்  -  ஜி. ராமகிருஷ்ணன்

தமிழ்நாடு, கேரளா இரண்டு மாநிலங் களிலும் இந்த மாதம் 29 அன்று திரையரங்குகளுக்கு வர இருக்கிறது, ‘வீரவணக்கம்’. அண்மையில் நடைபெற்ற முன் வெளியீட்டு நிகழ்ச்சியில் சிபிஐ(எம்) மாநிலச் செய லாளர் பெ. சண்முகம், சிபிஐ மாநிலச் செயலாளர் ஆர். முத்தரசன், தி.க தலைவர் கி.வீரமணி, விசிக தலைவர் தொல். திருமாவளவன் ஆகியோருடன் சேர்ந்து இந்தப் படத்தைக் காணும் வாய்ப்பு அமைந்தது. தமிழ்நாடு, கேரள மக்களின் சகோதரத்து வத்தை உறுதிப்படுத்தும் ஓர் அற்புதமான படம்  இது. இரண்டு மாநிலங்களுக்குமான வரலாறு சார்ந்த தொப்புள்க்கொடி உறவை மையப்படுத்து கிறது. இ.எம்.எஸ் “எனது தலைவர் கிருஷ்ண பிள்ளை” என்று தனது சுயசரிதையில் எழுதி யிருக்கிறார். வைக்கத்தில் ஓர் எளிய குடும்பத்தில் பிறந்த கம்யூனிஸ்ட் போராளி கிருஷ்ணப்பிள்ளை சிறியதொரு கிராமத்திற்குச் சென்றாலும் இரண்டே நாட்களில் அங்குள்ள மக்களை அரசியல்படுத்தி கம்யூனிஸ்ட்டுகளாக மாற்றிடும் திறன் பெற்றி ருந்தவர். கட்சி தடைசெய்யப்பட்டபோது கைது செய்யப்பட்டு கன்னியாகுமரி மாவட்டத்தின் இடலாக்குடி சிறையில் அடைக்கப்பட்டார். கம்யூனி ஸ்ட்டுகள் உள்ளிட்ட சுதந்திரப் போராட்ட வீரர்களை அந்தச் சிறையில் அடைத்து வைத்து, அன்றைய பிரிட்டிஷ் அரசு சித்ரவதை செய்தது. அந்தச் சிறையில் 1940-களில் கிருஷ்ணப்பிள்ளை, மதுரை யைச் சேர்ந்த காங்கிரஸ் தலைவர் வேலாயுதம் இருவரும் அடைக்கப்பட்டனர். அங்கே அவர்கள் உயிர்த் தோழர்கள் ஆனார்கள். அந்த நட்பால் வேலாயுதமும் கம்யூனிஸ்ட் ஆனார். படத்தில் கிருஷ்ணப்பிள்ளையாக சமுத்திரக் கனி நடித்திருக்கிறார். வேலாயுதத்தின் பேரனாக பரத்தும் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் மிக முக்கியமான ஒரு கதாபாத்திரத்தை ஏற்றிருப்பவர் 95ஆவது அகவையில் இருக்கும் கேரளத்தின் புரட்சிப் பாடகி பி.கே.மேதினி. சுதந்திரத்துக்கு முந்தைய காலத்தில் தமிழகத்தி லும் கேரளாவிலும் சாதிக் கொடுமை பல கொடூர மான வடிவங்களில் இருந்தது. குறிப்பாக, கேர ளத்தின் சாதிக் கொடுமையைப் பற்றிக் குறிப்பிட்ட சுவாமி விவேகானந்தர், “பைத்தியக்காரர்களின் கூடாரம்” என்று குறிப்பிட்டார். தமிழகத்தில் கீழத்தஞ்சை உள்ளிட்டு எல்லா மாவட்டங்களிலும் சாதிக் கொடுமை நிலவியது. சாதிக் கொடுமையும், நிலப்பிரபுத்துவச் சுரண்டலும் பின்னிப் பிணைந்திருந்த நிலையில், கேரளத்தில் கம்யூனிஸ்ட்டுகள் வீரஞ்செறிந்த போராட்டங்களை நடத்தினார்கள். புன்னப்புரா, வய லார் உள்ளிட்ட போராட்டங்களைத் தொடங்கியவர் கிருஷ்ணப்பிள்ளை. 20ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் நடந்த அந்தப் போராட்டங்கள் படத்தில் சிறப்பாகக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. நிலப்பிரபுத்துவச் சுரண்டலையும், கொடூர மான சாதியக் கொடுமையையும் ஒருசேர எதிர்த்து  நடந்த போராட்டம்  அம்மாநிலத்தில் தீண்டாமை பெருமளவுக்கு ஒழிக்கப்படுவதற்கு இட்டுச் சென்றது. மேலும், 1957இல் ஆட்சிப் பொறுப் பேற்ற இ.எம்.எஸ். தலைமையிலான கம்யூனிஸ்ட் கட்சி அரசு மேற்கொண்ட நில விநியோக நட வடிக்கைகள் தேசத்திற்கே வழிகாட்டும் அளவுக்கு பெரிய மாற்றங்களை நிகழ்த்தின. உயர்சாதியைச் சேர்ந்தவரும் செல்வந்தரு மான ராஜ மகேந்திரன் தமிழகத்தில்  ஒரு பின்தங்கிய கிராமத்தில் கடுமையான சாதி மற்றும் கொடுமை களை அனுபவித்து வரும் பட்டியல் சமூக மக்க ளின் மீட்பராக மாறுகிறார்.  தனது தாத்தாவிற்கும், அவரோடு இடலாக்குடி சிறையில் அடைக்கப் பட்டிருந்த    கிருஷ்ணப்பிள்ளைக்கும்  நட்பு ஏற்பட்ட தை அந்த மக்களிடம் கூறுகிறார். கிருஷ்ணப் பிள்ளையின் வரலாற்றை எடுத்துக்கூறி சாதிக் கொடுமைகளை எதிர்த்துத் தைரியத்துடன் போராட ஊக்குவிக்கிறார்.  அந்தக் காலத்தில் கிருஷ்ணப்பிள்ளையுடன் பல போராட்டங்களில் பங்கேற்ற சிறுதா என்ற புரட்சிப் பாடகியை சந்திப்பதற்காக  மகேந்திரன் கிராமவாசிகளுடன் கேரளத்திற்குச் செல்கிறார். அந்த சிறுதாவுக்கு இப்போது 97 வயதாகிறது. தன்னைச் சந்திக்க வந்த  கிராம மக்களுக்கு சிறுதா சொல்லும் போராட்டக் கதைகள் அவர்களுக்குத் துணிவையும்  நம்பிக்கையையும் ஊட்டுகின்றன. தோழர் பி. கிருஷ்ணப்பிள்ளை மறைந்துவிட்டாலும் இந்த மக்களுக்கு ஒரு புதிய ஊக்க சக்தியாகத் திகழ்கிறார்.  கம்யூனிஸ்ட் கட்சி தடை செய்யப்பட்ட காலத்தில் கேரள மாநிலக் குழு செயலாளராக இருந்தவர் கிருஷ்ணப்பிள்ளை. அடக்குமுறைச் சூழலில்  மாறுவேடத்தில் ரகசியமாக இரு மாநிலங் களிலுமே அவர் பணியாற்றினார். அடக்கு முறை களை  எதிர்கொண்ட அவரது துணிச்சல், சாகசம்,  தலைமைத்துவ திறன்கள் படத்தில் உயிர்ப்போடு சித்தரிக்கப்பட்டுள்ளன. இடலாக்குடி சிறையில் இருந்தபோது, சுசீந்திரம் கிராமத்தின் தங்கம்மா வுடன் ஏற்பட்ட நட்பு, காதலாக, திருமண உறவாகப் பரிணமிப்பதைக் காட்டியிருப்பது படத்திற்கு மேலும் மேலுமோர் உயிர்ப்பைத் தந்துள்ளது. கேரளத்தில் கம்யூனிஸ்ட் இயக்கத்திற்கு வித்திட்ட கிருஷ்ணப்பிள்ளை தமிழகத்தின் மருமகன் என்பது குறிப்பிடத்தக்கது. ராஜ் மகேந்திரன் மகள் லட்சுமி பட்டிய லினத்தைச் சார்ந்த இளைஞரை விரும்புகிறார். இந்தச் சாதி மறுப்புக் காதலை சாதி உணர்வா ளர்கள் ஏற்கவில்லை. தமிழகத்தில் இன்றும் தொடர்கதையாக உள்ள சாதி ஆணவக் கொலை யை இப்படம் சாடுகிறது. இரண்டு மாநிலங்களிலும் நிலவிய சாதிக் கொடுமையை எடுத்துக் காட்டும் ‘வீர வணக்கம்’,  தந்தை பெரியார் முன்னெடுத்த சமூக சீர்திருத்த இயக்கத்தைக் கொண்டாடுகிறது. படத்தில் முக்கியப் பாத்திரங்களில் நடித்த  சமுத்திரக்கனி, பரத், மேதினி பங்களிப்பு சிறப்பா னது. பிற பாத்திரங்களில்  ரித்தேஷ், சுரபி லட்சுமி, பிரேம்குமார், பரணி, ஐஸ்வீகா, ஆதர்ஷ், சித்தாங் கனா, சித்திக், அரிஷ்டோ சுரேஷ், ரமேஷ் பிசாரடி, பீமன் ரகு, பிரமோத் வெளியநாடு, உல்லாஸ் பந்தளம், ரியாஸ் நெடுமங்காடு ஆகியோரும் சீரான உணர்வார்ந்த நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். தமிழ் மக்களின் நெஞ்சங்களில் தமது தனித்துவக் குரலோடு கூடிய பாடல்களால் குடியேறியவரான டி.எம். சௌந்தரராஜனின் புதல்வர் டி.எம்.எஸ்.  செல்வகுமார் பின்னணிப் பாடகராக அறிமுக மாகியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.  கம்யூனிஸ்ட் இயக்கத்தின் வீர வரலாற்றை  யாராலும் மறுக்க முடியாத, மறக்க முடியாத வடிவில் திரைப்படமாக பதிவுசெய்வது எப்போதாவதுதான் நிகழ்கிறது. அந்த வகையில் இயக்குநர் அனில் வி.  நாகேந்திரன் மிக நேர்த்தியான கலை வடிவில் கம்யூனிஸ்ட் இயக்க வரலாற்றின் ஓர் அத்தியா யத்தைப் பதிவு செய்துள்ளார். தமிழிலும் மலையா ளத்திலும் மட்டுமல்லாமல், எல்லா மொழிகளிலும் மக்களிடம் போய்ச் சேர வேண்டிய படைப்பு இது.  மனிதரை மனிதர் சுரண்டும் முறையை ஒழிக்க வேண்டும் என்ற கொள்கை கொண்ட கம்யூனிஸ்ட் இயக்கமும், கம்யூனிஸ்ட்டுகளும் இந்த நாட்டின் மக்களுக்காக எத்தகைய வீரப் போராட்டங்களை மேற்கொண்டார்கள், அருந் தியாகங்களை மேற் கொண்டார்கள் என்பனவற்றை அறிந்துகொள் ளும் ஆர்வத்தை அனைவருக்கும் ஏற்படுத்தும் படம் என்றால் மிகையில்லை. கடந்த காலத்தை  உரமாக்கி எதிர்காலத்தை நமதாக்கிட நிகழ்கா லத்தின் இளம் தலைமுறையினருக்கு ஒரு கையேடாக வந்துள்ளது ‘வீர வணக்கம்’.

ஜி. ராமகிருஷ்ணன்

வீடுகளை இழந்து வீதியில் நிற்கும் நரிக்குறவ மக்கள்

(27.08.2025 தீக்கதிர் செய்தி)
வீடுகளை இழந்து வீதியில் நிற்கும் நரிக்குறவ மக்கள்

நடவடிக்கை எடுக்க  சிபிஎம்  வலியுறுத்தல்

அறந்தாங்கி, ஆக. 26-  புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி ஊராட்சி ஒன்றியம் ரெத்தினகோட்டை ஊராட்சி கூத்தாடிவயல் பகுதியில், இரு இடங்களில் நரிக்குறவ மக்கள் வசித்து வருகின்றனர்.  எம்ஜிஆர் ஆட்சி காலத்தில் ஒரு பகுதியில் கட்டி கொடுக்கப்பட்ட வீடுகளும், அதேபோல் 2001 இல், ஒரு பகுதியில் என 30 வருடங்களுக்கு முன்பு கட்டி கொடுக்கப்பட்ட 240-க்கும் மேற்பட்ட வீடு களின் சுற்றுச்சுவர் சேதம டைந்து மேற்கூரை இடிந்து,  வசிப்பதற்கு முடியாத அளவு உள்ள வீடுகளை அகற்றிவிட்டு புதிய வீடு களை கட்டித் தரக்கோரி, நரிக்குறவ மக்கள் பலமுறை  கோரிக்கை வைத்தனர்.  இந்நிலையில், புதிய வீடு கட்டிக் கொடுக்கப்படும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்த நரிக்குறவ மக்களுக்கு, அறந்தாங்கி ஊராட்சி ஒன்றியம் சார்பாக, புதிய வீடு கட்டித் தருகிறோம் என்றும், மூன்று மாத காலத்திற்குள் உங்கள் வீடு கட்டித்தரப்படும் என்று கூறிய நிலையில் கூத்தாடிவயலில் இரண்டு இடங்களில் வசித்த சுமார் 240  வீடுகள் இடிக்கப்பட்டன. பின்னர், கம்பி கட்ட குழி தோண்டப்பட்டு இரண்டு மாதம் ஆகியும், இதுவரை எந்த வேலையும் நடைபெறவில்லை. அன்றாடம் கூலி வேலை செய்தும், துப்புரவுப் பணி செய்தும் பிழைத்து வரும் இந்த மக்கள், இருப்பதற்கு இடம் இல்லாமல் மரத்தடியிலும், வெட்ட வெளியிலும் குடியிருந்து வருகிறார்கள்.  கடந்த சனிக்கிழமை பெய்த கனமழையில் இருக்க இட மில்லாமல் பிளாஸ்டிக் சாக்குகளை பிடித்துக் கொண்டும், பக்கத்தில் இருக்கும் கடைகள் பக்கவாட்டிலும் ஓரமாக குழந்தைகளை கையில் வைத்துக் கொண்டு தூக்கம் இல்லாமல் அவதிப்பட்டு வருகின்றனர். விரைந்து வீடு கட்டித் தருகிறோம் என்று கூறி இருந்த வீட்டையும் இழந்து, இரவு-பகலாக அவதியுற்று, தெருவில் சமைத்தும் உறங்குவதற்கு இடம் இல்லாமல் மிகுந்த சிரமத்தை அனுபவித்து வரும் இப்பகுதி மக்களை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முன்னாள் மாவட்டச் செயலாளர் எஸ். கவி வர்மன், நகரச் செயலாளர் அலாவுதீன், சிஐடியு மாவட்ட துணைச் செயலா ளர் கர்ணா, சிபிஎம் நகரக் குழு உறுப்பினர்கள் கணேசன், இன்பா,  மாதர் சங்க நிர்வாகிகள் லதா, இந்தி ராணி உள்ளிட்டோர், கட்டுவதற்கு குழி தோண்டப்பட்ட இடங்களை பார்வை யிட்டு, அப்பகுதி மக்களிடமும் விசாரித்தனர்.  அப்போது, அவதிப்பட்டு கொண்டிருக்கும் நரிக்குறவ மக்க ளுக்கு உடனடியாக வீடு கட்டி கொடுக்க வேண்டும். அதுவரை அரசாங்கத்தின் பொது இடத்தில் தங்கு வதற்கு அடிப்படை வசதி செய்தும், நிவா ரணம் வழங்கியும் அவர்களது இன்ன லைப் போக்க ஊராட்சி ஒன்றியமும், மாவட்ட நிர்வாகமும் முன்வர வேண்டும்  என்றும் கேட்டுக் கொண்டனர்.

Thursday, 31 July 2025

தீக்கதிர் 01.08.2025

எஸ்.கவிவர்மன் மீது கொலை மிரட்டல் விடும் காவலர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: சிபிஎம் வலியுறுத்தல்

மக்கள் போராளி எஸ். கவிவர்மன் மீது கொலை மிரட்டல் விடுத்துள்ள காவலர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி உள்ளது. இதுகுறித்து கட்சியின் மாவட்டச் செயலாளர் எஸ்.சங்கர் தலைமையில் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஏ.ஸ்ரீதர், எஸ். ஜனார்த்தனன், கி.ஜெயபாலன், மாவட்டக்குழு உறுப்பினர் சி.அன்பு மணவாளன், சிஐடியு நிர்வாகி எம்.ஏ.ரகுமான் ஆகியோர் வியாழக்கிழமை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அபிேக் குப்தாவிடம் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: இந்திய மாணவர் சங்கத்தின் புதுக்கோட்டை மாவட்ட மாநாடு கடந்த செவ்வாய்க்கிழமை அறந்தாங்கியில் நடைபெற்றது. இந்த மாநாட்டு பேரணியை வாழ்த்திப் பேசுவதற்காக எங்கள் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினரும், முன்னாள் மாவட்டச் செயலாளருமான எஸ்.கவிவர்மன் சென்றுள்ள்ளார். வாழ்த்திப் பேசிவிட்டு, பேரணியில் சிறிது தூரம் நடந்து சென்ற எஸ்.கவிவர்மன்; அருகில் சாலை ஓரமாக நிறுத்தி வைத்திருந்த தனது காரை எடுப்பதற்காகச் சென்றுள்ளார். அப்போது, அந்த வழியாக ரோந்துப் பணியில் இருந்த காவலர், கவிவர்மனைப் பார்த்து தகாத வார்த்தைகளால் திட்டி “வண்டியை எடுய்யா” என்று ஒருமையில் பேசியுள்ளார். ஒரமாக நிற்கும் வண்டியை எடுக்கத்தான் வருகிறேன் சார் என்று என்று கவிவர்மன் கூறியதற்கு, “நீ என்ன பெரிய மயிரா” எனக் கூறி கவிவர்மனின் செல்போனையும் பறித்துள்ளார். மேலும், தான் ஓட்டிவந்த டாட்டா சுமோ ரோந்து வாகனத்தை அவர் மீது ஏற்றி கொலை செய்யவும் முயற்சித்துள்ளார். இதனைத் தொடர்ந்து அங்கிருந்த பொதுமக்களும், கட்சியினரும் முறையிட்டனர். இதனைத் தொடர்ந்து, அங்கு வந்த காவல்துறை அதிகாரிகள் சமாதானம் செய்ததோடு, தகராறு செய்த காவலர் ராஜசேகரை மன்னிப்பு கேட்க வைத்துள்ளனர். மேலும், பணியிட அவரை மாறுதலும் செய்துள்ளனர். இதனால், ஆத்திரமடைந்த காவலர் ராஜசேகர், கவிவர்மனையும், அவரது மனைவியையும் தொலைபேசியில் தொடர்ந்து கொலை மிரட்டல் விடுத்து வந்துள்ளார். அவரின் போனை எடுக்காமல் இருந்தால், வேறுவேறு எண்ணில் இருந்து கொலை மிரட்டல் விடுத்து வருகிறார். எந்த நேரமும் களத்தில் நின்று மக்களுக்காக போராடி வரும் எங்கள் கட்சியின் தலைவர் எஸ்.கவிவர்மன் மீது, காவல் துறையைச் சேர்ந்த ஒருவரே கொலை மிரட்டல் விடுவது வன்மையாக கண்டிக்கத்தக்கது.எனவே, தவறுமேல், தவறு செய்துவரும் காவலர் ராஜசேகர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  மனுவைப் பெற்றுக்கொண்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விசாரித்து உரிய நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்துள்ளதாக கட்சியின் மாவட்டச் செயலாளர் எஸ்.சங்கர் தெரிவித்துள்ளார்.

Tuesday, 20 May 2025

செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பமும் எதிர்காலச் சவால்களும் - எஸ்.கவிவர்மன்

செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பமும் எதிர்காலச் சவால்களும் - எஸ்.கவிவர்மன்

செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பம்  (Artificial Intelligence) சம்பந்தமான உலகளாவிய முதல் கூட்டம் 2024 ஆம் ஆண்டு நியூயார்க் நகரில் ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சிலில் நடைபெற்றது.  கூட்டத்தில் பேசிய  ஐநா பொதுச் செயலாளர் அண்டோனியோ குட்ட ரெஸ்  ‘மனித வாழ்வின் ஒவ்வொரு பகுதியிலும் செயற்கை நுண்ணறிவு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் உலக அமைதி மற்றும் பாது காப்பிற்கு மிகப்பெரும் அச்சுறுத்தலாக அமையும்” என்றும் எச்சரிக்கை விடுத்திருந்தார். செயற்கை நுண்ணறிவு என்பது மிக வேகமாக வளர்ந்து வரும், எந்திரங்களை சிந்திக்க  வைக்கும் தொழில்நுட்பமாகும். மனிதனைப் போலவே எந்திரங்களும் சிந்தித்து செயல்படும் திறனை கொண்டதாக உருவாக்கப்பட்டு கொஞ்சம் கொஞ்சமாக அனைத்து துறைகளை யும் ஆக்கிரமித்துள்ளது. செயற்கை நுண்ணறிவு மனித மூளையை விட மிக வேகமாகவும் துல்லிய மாகவும் செயல்படுகிறது. பல்வேறு துறைகளில் திறன் மேம்பாட்டில் உதவுகிறது. மருத்துவம், அண்டவெளி ஆய்வுகள், வங்கிகள், நிதி நிறுவனங்கள், தகுதித் தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு மேம்பட்ட தகவல்களைத் தருவது போன்ற ஏராளமான நன்மைகள் உண்டு  என்பதை மறுக்க முடியாது. விண்வெளி ஆய்வில் மிகத் துல்லியமாகச் செயல்படுவதால் மிகப் பெரிய முன்னேற்றத்தை எட்ட முடிந்திருக்கிறது. இன்னும் சொல்லப்போனால் சமூக ஊடகம், மின் வணிகம், இணையதளத் தேடல்கள் என தனி பயனாக்கப்பட்ட சேவைகளை ஒவ்வொரு தனிப் பயனருக்கும் வழங்குகிறது.

சவாலாக மாறும் அபாயம்!

மனிதர்களால் செய்ய முடியாத ஆபத்தான பணிகளை பேரிடர் காலங்களில் செய்ய உதவுகிறது.  சுற்றுச்சூழல் போன்ற சமூக நலன் சார்ந்த பணிகளில் மனிதர்கள் செல்ல முடியாத இடங்களான காடுகள், மலைமுகடுகள், கடல் அடிப்பரப்பு போன்றவற்றில்  இத்தொழில்நுட்பம் மிகப்பெரிய அளவிற்கு ஆய்வுகளை மேற்கொள்ள உதவுகிறது. இவற்றையெல்லாம் தாண்டியும் பல நன்மைகள் இருந்த போதும் மிகப்பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்துகிற செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம், மிகப் பெரிய சவாலாக மாறும் அபாயம் உள்ளது. அனைத்து துறைகளிலும் வேலை இழப்பு தவிர்க்க முடியாதது ஆகிவிடும். செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம், தவறாகப் பயன் படுத்தப்பட்டால் நாட்டின் பாதுகாப்பிற்கே அது அச்சுறுத்தலாக அமையும். இத்தொழில் நுட்பம் இணையம் முழுவதும் விரவிக் கிடக்கும் தனிமனிதத் தரவுகள் உள்ளிட்ட பெரிய அள விலான தரவுகளை சேமித்துச் செயல்படுத்து கிறது.  இது அனைத்து தரவு பாதுகாப்புப் பிரச்சனைகளையும் ஏற்படுத்தும். செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி ஏகாதிபத்திய நாடுகள் மற்றும் வளர்ந்த நாடுகள் தயாரிக்கும் தன் இயக்க ஆயுதங்கள் மனித இனத்திற்கே அழிவை விளைவிக்கலாம். செயற்கை நுண்ண றிவு தொழில்நுட்பத்தை செயல்படுத்தும் பெரிய நிறுவனங்கள் ஓர் அதிகார மையமாக மாறும் அபாயமும் உள்ளது. ஏஐ தொழில்நுட்பம் மிக சக்தி வாய்ந்தது. இது நன்மை மற்றும் தீமைகளை கொண்டுள்ளது. அதன் முழுமை யான பயன்பாடு வறைமுறைகளுக்கு உட்பட்ட தாக இருக்க வேண்டும். தனிப் பயனர்கள் பயன் படுத்துவதற்கு ஏற்றதாக ஒரு திறந்தவெளியாக ஏஐ தொழில்நுட்பம் இருப்பது மனித குலத்திற்கு நல்லதல்ல. எல்லா பணிகளையும் செயற்கை

நுண்ணறிவு ஆக்கிரமித்துக் கொண்டால் அது மனித குலத்தின் உழைக்கும் திறனையும் அறி வையும் மட்டுப்படுத்தி விடும். செயற்கையாக போட்டோகிராப் உருவாக்குவது, வீடியோ உருவாக்குவது என்பதெல்லாம் மிக எளிது.  

மூன்று நிமிட குரலில்...

நீதிமன்றத்தில்  ஒரு வழக்கறிஞர் வழக்காடிக் கொண்டிருந்தால் அவர் குரலை எழுத்து வடிவமாக ஏஐ மாற்றிக் கொண்டே இருக்கும் நடைமுறை நீதிமன்றத்தில் பயன்பாட்டிற்கு வந்துவிட்டது.  ஒருவர் பேசாததை பேசியது போல் கொண்டு வர முடியும். ஒருவர் குரலை மூன்று நிமிடம் ரெக்கார்ட் செய்தால் போதும். அதை  வைத்து தத்ரூபமாக அவர் பல மணி நேரம் பல பாவனைகளில் பேசியது போலவே பேச வைக்க முடியும். கல்வித்துறையில் ரோபோக்கள், மருத்துவமனையில் ரோபோக்கள், ஆலைகள் தொழிற்சாலைகளில் ரோபோக்கள். அதற்கு ஓய்வு தேவையில்லை. விடுப்பு தேவையில்லை. மனிதர்களை விட பல மடங்கு செயற்கை நுண்ண றிவு திறனுடன் ரோபோக்கள் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் இப்போது நடைமுறைக்கு வந்துவிட்டன.

அனைத்துத் துறைகளையும் ஆட்கொள்ளும் ஏஐ...

வைரமுத்து, மேத்தா, அப்துல்ரஹ்மான், வாலி போன்ற இன்னும் பிற தமிழ் கவிஞர்களுக்கும் சுஜாதா, ஜெயகாந்தன், வசந்தி, அம்பை போன்ற எழுத்தாளர்களுக்கும் இனி  வேலை இல்லாமல் போகலாம். ஒரு தலைப்பைக் கொடுத்து ஒரு சிறுகதை வேண்டும், ஒரு தலைப்பை கொடுத்து ஒரு கவிதை வேண்டும் என்றால் கண் இமைக்கும் நேரத்தில் தந்து விடு கிறது. இனி இளையராஜாவோ, ஏ.ஆர்.ரகுமான், தேவாவோ தேவையில்லை. பாடல் வரிகளை  பதிவிட்டு இதற்கு ஒரு மெட்டமைத்து இசை யமைத்து தரவேண்டும் என்று கட்டளையிட்டால் உடனே புதிய மெட்டுடன் பாடல் தயாராகி விடுகிறது. அப்படியான ஏஐ  தொழில்நுட்ப செய லிகள் தற்போது நடைமுறைக்கு வந்துவிட்டது. ஒரு லச்சினை உருவாக்க வேண்டும் என்றால் ஒரு ஓவியர் தேவை. ஆனால் இப்போது அவர் களுக்கு வேலை இல்லை. என்ன மாதிரியான இலச்சினை வேண்டும் என நாம் குரல் பதிவிட்டால் ஒரு நிமிடத்தில் நாம் எதிர்பார்த்ததை விட அழகான லச்சினை வந்துவிடும். எதிர்கா லத்தில் உலகை ஆளப்போவது எந்திரங்களாகத் தான் இருக்குமோ என்ற அளவிற்கு செயற்கை  நுண்ணறிவுத் தொழில் நுட்பத்தின் தாக்கம்  அனைத்துத் துறைகளையும் ஆட்கொண்டு வருகிறது.

ஆழ்துளைக் கிணறு ஆபத்தும் மனிதக் கழிவகற்றும் கொடுமையும்

நவீன முதலாளித்துவம் பெற்றெடுத்த அறி வியலின் மிகப்பெரிய கண்டுபிடிப்பு இந்த செயற்கை நுண்ணறிவு என்பதில் சந்தேக மில்லை. ஆனாலும், தனிப்பயனர்கள் இதை தவ றாக பயன்படுத்தினால், அதனால் ஏற்படும் பாதிப்புகள் எப்படி இருக்கும் என்பதை நினைத்துப் பார்க்க முடியவில்லை. ஐடி நிறுவனங்களில் மிகப்பெரிய அளவு வேலை இழப்புகள் ஏற்பட்டு வருகின்றன. ஆண்ட்ராய்டு செல்போன் உபயோகிக்கத் தெரிந்தால் போதும். கடினமான கம்ப்யூட்டர் கோடிங் உட்பட கணினி அறிவு இல்லாத ஒருவரால் எழுத முடியும். ஆக கணித அறிவியலில் பட்டம் படித்தவர்க்கு வேலை இல்லை. நல்ல இலக்கியவாதி, நல்ல ஓவியர், பன்முகத்தன்மை கொண்ட செயல்பாட்டாளர் என்றெல்லாம் தனி மனித சாதனைகளை கொண்டாட இனி வாய்ப்பிருக்குமா என்பதெல் லாம் கேள்விக்குறிதான். வகுப்பறைகளில் ரோபோ டீச்சர், வாகன ஓட்டியாக ரோபோ, மருத்துவ அறுவை சிகிச்சை யில் ரோபோ என்று இப்போது உலகில் பல நாடு களில் நடைமுறைக்கு வந்துவிட்டது. ஆனால் மனிதக் கழிவுகளை மனிதனே அகற்றும் கொடுமைக்கு முழுமையாக முடிவுகட்ட  இந்த வளர்ச்சியால் முடியவில்லை. ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி விழுந்த குழந்தையை பல நாள்கள் போராடியும் காப்பாற்ற முடியவில்லை  இந்த அறிவியலால் என்பது நமது கடந்தகால அனுபவமாகவும் ஏக்கமாகவும் உள்ளது.

Sunday, 24 December 2023

கீழ்வெண்மணி

1968 டிசம்பர் 25
🔥கீழ்வெண்மணி துயர வரலாறு.
                                     -எஸ்.கவிவர்மன்
அரைப்படி நெல்மணி அதிகம் கேட்டதால் 44 பேரை உயிரோடு எரித்த ஆதிக்கவர்க்கம்.

'தனக்கு அடிமையாக இருந்தவர்கள் தன்னை எதிர்ப்பதா?' என்று ஆத்திரம் கொண்ட பண்ணையார் கோபாலகிருஷ்ணன் என்பவன், தனது அடியாட்களுடன் பெட்ரோல் கேன்கள், நாட்டுத் துப்பாக்கி சகிதம் வந்திறங்கினான். அவர்களுக்கு போலீசாரும் துணை நின்றனர். அவர்கள் முன்னிலையில் அந்த கொடிய சம்பவத்தை அரங்கேற்றினர். காட்டில் மிருகம் வேட்டையாடப்படுவது போல் கண்ணுக்கு கிடைப்பவர்கள் எல்லாம் சுடப்பட்டனர்.

இப்படி சுடப்பட்டவர்கள் கிட்டத்தட்ட 10 பேருக்கு மேல் இருப்பார்கள். இதனைக்கண்டு பயந்து நாலா மூலைக்கும் சிதறி ஓடி, வாய்க்கால் வரப்புகளில் ஒடி ஒளிந்துகொண்டனர் தொழிலாளர்கள். அனைத்து குடிசைகளும் எரிக்கப்பட்டன. நிராயுதபாணியாக நிற்கும் அப்பாவி பெண்கள், வயதானவர்கள், குழந்தைகள் உயிரைக் காத்துக்கொள்ள தெரு மூலையில் உள்ள ராமையா என்பவரின் சிறிய கூரைவீட்டில் ஓடி ஒளிந்தனர். வெறிபிடித்து அலைந்தவர்கள் அந்த வீட்டை கண்டுபிடித்து வீட்டை வெளியே தாழிட்டு பெட்ரோலை ஊற்றி எரிக்கின்றனர்.

பூட்டிய வீட்டுக்குள் பெரும் அலறல் சத்தம் எழுந்தது. 'ஐயோ, அம்மா ஆ...ஆ....எரியுதே!' என்ற சத்தம் மட்டும் திரும்ப திரும்ப கேட்கிறது. தான் பிழைக்காவிட்டாலும் தன் குழந்தையாவது பிழைக்கட்டும் என்று ஒரு பெண் தன் குழந்தையை தூக்கி எறிகிறார். கொடூரர்கள் குழந்தை என்றும் பாராமல் வெட்டி வீழ்த்தி தீயில் எரித்தனர். வெளிய வர முயற்சித்தவர்களை மறுபடியும் உள்ளே தள்ளினர்.

வெளியில் நின்று அழுத மூன்று பிஞ்சுக் குழந்தைகளையும் தீயின் உள்ளே தள்ளினர். தீயின் கோர நாக்குகளுக்கு சற்று நேரத்தில் 20 பெண்கள், 19 குழந்தைகள், 6 ஆண்கள்  என 44 உயிர்கள் தீக்கிரையானது. ஒரு பெண் தனது மகளையும் சேர்த்து கெட்டியாக அணைத்துக் கொண்டு கருகியிருந்தார்.

இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும்... கீழ்வெண்மணி தியாகிகள் போராடும் அனைவருக்கும் உரமாக இருப்பார்கள்.
 *தியாகிகளைப் போற்றுவோம்...*

*நிலப்பிரபுக்களால் ராமையாவின் குடிசைக்குள் வைத்து எரித்துக் கொள்ளப்பட்டவர்களின் (44) பெயரும் வயதும்.* 

1.தாமோதரன் (1)
2.ஆசைத்தம்பி (10)
3.ராஞ்சியம்மாள் (16)
4.பாப்பா (35)
5.குணசேகரன் (1)
6.ஜெயம் (10)
7.ஆண்டாள் (20)
8.ரத்தினம் (35)
9.செல்வி (3)
10.ஜோதி (10) 11.கனகம்மாள் (25)
12.கருப்பாயி (35)
13. வாசுகி (3)
14.நடராஜன் (10)
15.மாதாம்பாள் (25)
16.முருகன் (40)
17.ராணி (4)
18.வேதவள்ளி (10)
19.வீரம்மாள் (25)
20.சீனிவாசன் (40)
21. நடராஜன் (5)
22.கருணாநிதி (12)
23.அஞ்சலை (45)
24.தங்கையன் (5)
25.சந்திரா (12)
26.சின்னப்பிள்ளை (28)
27.சுந்தரம் (45)
28.வாசுகி (5)
29.சரோஜா (12)
30.ஆச்சியம்மாள் (30)
31.பட்டு (46)
32.ஜெயம் (6)
33.சண்முகம் (13)
34.குஞ்சம்பாள் (35)
35.கருப்பாயி (50)
36.நடராஜன் (6)
37.குருசாமி (15)
38.குப்பம்மாள் (35)
39.காவேரி (50)
40.ராஜேந்திரன் (7)
41.பூமயில் (16)
42.பாக்கியம் (35)
43.சுப்பன் (70)
44.சேது (26)
 வீரவணக்கம்
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

Saturday, 12 August 2023

கவிதை

வெட்டுவதுதான் தீர்வென்று நீங்கள் முடிவு செய்துவிட்டால்...

வாழ்வதற்கே வழியில்லை,
என்ன மயிருக்கு இந்த உயிரு..., வெட்டிப்பார்த்துக்கொள்ளலாம்!

"சின்னதுரை போல் படிங்கடான்னு" டீச்சர் சொன்னா
உங்க பெருமையெல்லாம்
வெறுமையா போச்சு வெட்டுறீங்க...

மனுச மூளைக்கு
மாறுங்கடான்னா,
வறுமை மூளைக்காரர்களாகவே வாழ்க்கையெல்லாம் அலையுறீங்க...

ஒரே வெட்டுல ஆட்டைத் துண்டுபோடும்
அய்யனார் சாமியா
சின்னத்துரைகள் மாறினால் 
உங்க வெறிகொண்ட தலையெல்லாம் வீதியில் கிடக்கும்.

நாங்கள் காப்பாற்றிக்கொள்ள எங்களிடம் உசுரைத்தவிர ஒன்னுமில்லை...

வெட்டுவதுதான் தீர்வென்று நீங்கள் முடிவுசெய்துவிட்டால்
வாருங்கள்...,
உங்களிடத்தில்
சாய்க்கவேண்டியது நிறைய இருக்கிறது!?

 எஸ்.கவிவர்மன்