Friday 22 July 2016

 

பெண்களுக்கு எதிரான இணைய ஒடுக்குமுறை!

முகநூலில் பலரும் பார்க்கும்படி தனது படத்தை மார்பிங் செய்து பரப்பியதால் மானம் போய்விட்டதாய் தன் உயிரை மாய்த்துக்கொண்ட வினுப்பிரியாவிற்கு அஞ்சலி செய்து பயன் இல்லை. இச்சமூகம் உளமாற சில விசயங்களை உள்வாங்கவேண்டும். இந்த விஞ்ஞான யுகத்தில் ஒரு பெண்ணை ஆபாசமாகப் படம் எடுப்பது ஒன்றும் பெரிய காரியமில்லை. அதற்காக முக்காடிட்டு கொண்டே அலையமுடியாது. துணிச்சல் மூலமே இப்பிரச்சனைக்கு தீர்வு காணமுடியும். இம்மாதிரியான ஊடக ஒடுக்குமுறைக்கு பெண் அடிபணியமாட்டாள் என்ற எண்ணம் மேலோங்கினாலே பெண்கள் தைரியமாக இப்பிரச்சனைகளை எதிர்கொள்ள முன்வருவார்கள். இது போன்ற பிரச்சனைகளில் குடும்பத்தில் உள்ளவர்கள், நண்பர்கள், நெருக்கமானவர்கள் தைரியப்படுத்தவேண்டும்;.  அதைவிட்டுவிட்டு உனக்கு பேஸ்புக் தேவையா? இதுக்குத்தான் படிக்க அனுப்பினதா? போட்டோவை எதற்கு அப்லோடு செய்தாய்? என்று அவளை குறுகவைக்கும்போது நாம் தான் ஏதோ தவறு செய்துவிட்டோம் என்ற மனநிலைக்கு பெண் செல்கிறாள்.

     இப்படிப் பலரும் செய்யும் உபதேசம் பெண்களை மிரட்டுவதாகவே உள்ளது. ஏன் ஒரு பெண் தன் விருப்பங்களை; புகைப்படத்துடன் வலைதளங்களில் பதிவிடுவது என்ன அவ்வளவு பெரிய குற்றமா? அப்படி பதிவிட்டால் அய்யோ மானம் போய்விடும், மார்பிங் செய்துவிடுவார்கள் என்று பிதற்றுவது எவ்வகையில் ஏற்கத்தக்கது. கீழ்தரமான பதிவுகளை, மற்றவர்களைக் காயப்படுத்தும் படியான குற்றங்களைச் செய்பவர்களைக் கடுமையாக தண்டிக்கவேண்டும் என்பதை வலியுறுத்துவதற்கு மாறாக, பெண்களை கொச்சைப்படுத்துவது சரிதானா?. பேஸ் புக்கில் தவறு இழைப்பவர்களை, அவர்கள் பயன்படுத்தும் கணினியின் ஐபி முகவரி மற்றும் சர்வர் மூலம் எளிதில் இனங்காணலாம். யாருக்கு தெரியப்போகிறது என்று தவறிழைப்பவர்களை தண்டிப்பதில் நமது காவல்துறையின் செயல்பாட்டில் உள்ள சிக்கல்கள் காரணமாகிறது.

     என்னதான் காவல் நிலையங்கள் பலகோடி நிதி ஒதுக்கி நவீன மாக்கப்படுகிறது என்று அரசு அறிக்கை விட்டாலும், இன்று இணையக்குற்றங்கள், அல்லது விஞ்ஞான ரீதியான குற்றங்களைத் தடுப்பதற்கு உள்@ர் காவல் துறையால் முடியாதநிலை உள்ளது. அதற்கான பயிற்சியோ, வசதிகளோ தற்போதைய காவல் நிலையங்களில் இல்லை. சைபர் கிரைம் என்பது தனியாக உள்ள துறை அதன் மூலம் நடவடிக்கை எடுக்கவேண்டுமானால் அதிகாரிகளின் பரிந்துரைகள், சில சட்ட நடைமுறைகள் உள்ளன. சைபர் கிரைம் மக்களுக்கு தொடர்பில்லாத தூரத்தில் உள்ளது. காவல் நிலையங்களில் புகார் தெரிவிக்கும்போது சாதாரண புகாரை விசாரிப்பது போலவே, உள்@ர் காவல் நிலையங்களில் அனுகுவதன் மூலம் பிரச்சனைக்கு தீர்வு கிடைக்காமல், மேலும் அவமானப்படுகிறோமோ என்ற எண்ணத்தில் பெண்கள் புகார் தெரிவிக்க வருவதற்கு தயங்குகின்றனர். அதன் வெளிப்பாடுதான் இப்போது தமிழகத்தில் ஊடகங்கள் முதல் பலரும் நாம்தான் பாதுகாப்பாக இருக்கவேண்டும் என்று ஆரம்பித்து பெண்கள் முகநூல் பயன்படுத்துவதே தவறு. தேவையில்லை விட்டுவிடுங்கள் இது பெண்களுக்கான இடம் இல்லை. எனற தொனியில் பெண்களை இணைய ஒடுக்குமுறைக்கு இட்டுச்செல்கிறது.

மாணபங்கம் செய்தல் என்ற கற்பிதம்

     ஒரு பெண் தனியாக நடந்து செல்கிறபோது ஒருவன் அவள் கையை பிடித்து இழுத்துவிட்டான், இதனால் “என் மானம் போய்விட்டது” என்று ஒரு பெண் இடிந்து போவது எதானால்? “என்னை ஒருவன் போட்டோ எடுத்து நெட்டில் கிராபிக்ஸ் செய்து நிர்வாணமாகப் போட்டுவிட்டான் எனவே நான் அசிங்கப்படுத்தப்பட்டுவிட்டேன். இனி யார் முகத்திலும் விழிக்கமாட்டேன் என்று தற்கொலை செய்துகொள்கிறாள் இது எதனால்?    என்னிடம் ஒருவன் லவ்லெட்டர் கொடுத்தான். எனக்கு அசிங்கமாகிவிட்டது. என் வீட்டிற்கு தெரிந்தால் படிக்க அனுப்ப மாட்டார்கள் என கவலையில் உறைந்துபோகிறாள் இது எதனால்? அப்பா அல்லது அண்ணன் முன்பு தன் சக தோழனுக்கு கைகொடுத்து பேசியதால், “நீ ஓடுகாளியா ஒரு பயலுக்கு எங்க முன்னாடியே கைகொடுத்துப் பேசுற” என்று பேசும் குடும்பத்தாரின் முன் கசங்கி நிற்கிறாள் இது எதனால்?

     இந்த கேள்விகளுக்கு பதில் எதுவென்றால், கையைபிடித்து இழுத்தவனை ஓங்கி ஒரு அறை கொடுத்துவிட்டு காவல் நிலையம் செல்ல துணிய கற்றுக்கொடுக்காததால் அந்த பெண் இடிந்துபோனாள். லவ்லெட்டர் கொடுத்தவனிடம் தன் விருப்பத்தை அல்லது மறுப்பை வெளிப்படுத்திவிட்டு தானே அதை எதிர்கொள்ளும் சக்தியற்றவளாக பெண்ணை வைத்திருப்பதால் அவள் உறைந்துபோகிறாள்.     சகதோழனுக்கு கைகொடுத்துப்பேசுவது தவறு என்று சொல்லும் ஆணாதிக்க குனம் கொண்டவர்களிடம் பதில் பேசி எதிர்க்க முடியாததால் அப்பா அம்மாவுக்கு தெரியாமல் பேசவேண்டும் என்று முடிவுக்கு வருகிறாள்.

     நெட்டில் நிர்வாணமாய் படம் வெளியிட்டால் தன் மானம் போய்விட்டது என்று இறந்துபோனதால் ‘மானம்’; என்ற வார்த்தை வெற்றி பெற்று விடுகிறது. பெண் தோற்றுப்போகிறாள்.  ஒரு பெண்ணின் உயிரை காப்பாற்றுவதற்கு பேருகாலத்தில் ஒரு ஆண் மருத்துவர் அவளின் உடலை நிர்வாண நிலையில் பரிசோதிக்கிறார். அப்போது தன் மனைவி அல்லது மகளின் மானம் போய்விட்டதாக யாரும் நினைப்பதில்லை. இடத்திற்கு தகுந்தவாறு பெண்ணை மானம் என்ற வார்த்தை மூலமாக, கௌரவம் என்ற சொல் மூலமாக இச்சமூகம் பலிகொண்டு வருகிறது.

     மானம், அவமானம், களங்கம், கற்பு இவைகள் பெண்களுக்கு எதிராக பயன்படுத்தப்படுகிற வார்த்தை. இவை பெண்களை இயலாதவர்களாக வைத்திருக்க தூண்டுகிறது. மேற்கண்ட செயல்களில் ஒடுக்குமுறைகளுக்கு எதிரான நடவடிக்கைகள் தேவை என்ற தன்னப்பிக்கை பெண்களுக்கு உருவாவதை கலாச்சாரம், பண்பாடு என்ற பதங்கள் தடுக்கிறது. வினுப்பிரியாவின் மரணம், சுவாதியின் கொலை, இன்னும் கண்ணுக்குத் தெரியாமல் நடந்துகொண்டிருக்கிற மிரட்டல்கள், பிளாக் மெயில்கள் என்று நிறைய இருக்கலாம். பெண்கள் தைரியமாக இணையத்தில் வளம் வரவேண்டும். விவாதிக்கவேண்டும், மன உழைச்சலின்றி தங்கள் பதிவுகளை சுதந்திரமாக வெயிடும் சூழ்நிலையை உருவாக்கவேண்டும். பள்ளி மாறுவேடப்போட்டிகளில், பெண் குழந்தைகளை வேலுநாச்சியாராக, குயிலியாக பார்த்துச் சந்தோசப்படும் பெற்றோர்கள், நிஜத்தில் சுதந்திரமானவர்களாக பெண்களை மதிக்கவேண்டும். வளர்ச்சிக்காக வந்த விஞ்ஞானத்தை குரூரமான மனநிலை கொண்ட சமூக விரோதிகளிடமிருந்து மீட்கவேண்டும். சைபர் குற்றங்களில் ஈடுபடுபவர்கள் மீது வரும் புகார்களைச் சில மணி நேரங்களில் உரிய நடவடிக்கைக்கு எடுக்க காவல்துறை முன்வரவேண்டும். வினுப்பிரியாவின் மரணம் இணையத்தை விட்டு பெண்களை துண்டிப்பதாக இருக்கக்கூடாது. தைரியத்தை விதைப்பதாக மாற்றவேண்டும். இப்படிப்பட்ட அவலங்களுக்கு எதிராகப் போராட பெண்கள் முன்வரவேண்டும். நிர்வாணம், அவமானம் என்ற வார்த்தைகளை கொண்டு பெண்களை அடக்கும் ஆணாதிக்க அவலத்தை பெண்ணீய சிந்தனையார்கள் உள்ளிட்ட அனைத்து முற்போக்கு அமைப்புகளும் எதிர்த்துப் போராடவேண்டும். இதுதான் வினுப்பிரியாக்களுக்குச் செய்யும் உண்மையான அஞ்சலி.

எஸ்.கவிவர்மன்
சிபிஐ(எம்) மாவட்டச் செயலாளர்
புதுக்கோட்டை மாவட்டம்.