Thursday 25 February 2016

இளவரசன் பேசுகிறேன்....

என் அன்பிற்குறியவர்களே...
என் காதலுக்காக கண்ணீர்விட்டவர்களே...
என் தேவதையே திவ்யா...!

நான் எப்படிச் செத்தேன்
என்பதுதான் உங்கள் ஐயம்...
நான் ஏன் செத்தேன் என்று
யோசிப்பீர்களா...!

அம்பிகாவதி அமராவதி...
லைலா மஜ்னு...
சலீம் அனார்கலி ...
இவர்களைப்பேசிய வாய்கள்...
இனி என்னையும் பேசும் என்பதற்காகவா?

இல்லை...
தலைப்புச் செய்தியாகவேண்டும்
என்ற தலையயழுத்து எனக்கில்லை...
அமரகாவியம் ஆகவேண்டும் என்ற
ஆசையும் எனக்கில்லை...

வாழவேண்டும் என ஆசைப்பட்டேன்...
என் ஆசை மனைவி திவ்யாவின்
விரல் பிடித்து நடக்கவேண்டும் என்பதைத் தவிர...
சராசரிக் கணவனாக
சாகும்வரைக்கும்
அவள் கண்ணீர் துடைக்கவேண்டும் என்பதைத் தவிர...
வேறெந்த ஆசையும் இல்லை.

இப்போது
எனக்கும் சேர்த்து என் திவ்யாவின்
இதயம் துடித்துக்கொண்டிருக்கிறது...

ஊரே எரியும் என ஒருபோதும் நினைக்கவில்லை...
நெருப்பு எங்களுக்காகவே படைக்கப்பட்டது
போல் பற்றி எரிந்தது...
சட்டம் காப்பாற்றவில்லை...
சமூகம் காப்பாற்றவில்லை...
காதல் அனாதைகளானோம்...
கடைசியில் என் கண்மணி திவ்யா கல்லாக்கப்பட்டாள்.
நான் பிணமாக்கப்பட்டேன்.

மருத்துவர்கள் குழு
என் உடம்பை அறுத்து கூராய்வு செய்தது.
என் ரத்தமும் சதையும்
நான் செத்ததைச் சொல்லும்...

வேறென்ன தெரியப்போகிறது உங்களுக்கு.
தயவு செய்து
சமூகத்தைக் கூராய்வு செய்யுங்கள்...

காதலுக்கான கடைசி மரணம்
நானாக மட்டும் இருக்கட்டும்.

-எஸ். கவிவர்மன் அறந்தாங்கி

Wednesday 24 February 2016

நந்தவன நாட்கள்....


இனி சாத்தியமில்லை
என்றபோதும்…
சத்தியமாய் மறக்கமுடியவில்லை
அந்த அழகிய நாட்களை.

விரல்பிடித்து 
வீதி நடந்ததை…
நான் பட்டினிகிடந்தால்
உனக்கு பசிக்குமே…
எனக்கு காய்ச்சலென்றால்
உன் உடம்பு கொதிக்குமே…
அகராதியில் கூட இல்லாத
அழகிய சொற்களை
உன் கண்கள் பேசுமே...
அந்த வீதிகளும்…
வீடும் இன்னும் இருக்கிறது.
கடக்கும்போதெல்லாம்
மனசு கனத்துப்போகிறது…
இப்போதும்
உன் நினைவுகள் 
என் சுகமான வலிகள்
அந்த நந்தவன நாட்களின்
அழகிய கவிதையே…
உன்னையா இழந்துவிட்டேன்.
-கவிவர்மன்…