Thursday 13 April 2023

நண்பனாக செயல்படுமா காவல்துறை?

நண்பனாக செயல்படுமா காவல்துறை?
சுய விருப்பு வெறுப்பிற்கும், அரசு அதிகாரத்தின் ஏவலுக்கும் அடிபணியும் காவல்துறையில் பணியாற்றும் யாவருக்குமான கடிதம் இது. வேலை தேடித் திரிந்து, எந்த வேலை கிடைத்தாலும் சரி என முயற்சிசெய்யும் போது காவல்துறையில் சிலருக்கு வேலை கிடைக்கிறது. குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டுமென்ற வேட்கையோடு செல்லும் ஒரு கூலித் தொழிலாளி, ஒரு விவசாயக் குடும்பத்திலிருந்து வரும் அன்பும் அறனும் பெற்ற இளைஞன்தான் காக்கி உடைக்குள் கம்பீரமாக மிளிர்கிறான். காலில் சேற்றை அப்பியபடி கலப்பையோடும், கதிர் அறுத்த அரிவாளோடும் அம்மாவும் அப்பாவும் தம்பிக்கு போலீஸ்ல வேலை கிடைச்சிருக்கு என்று தன் மகிழ்ச்சியைத் தன் சொந்த பந்தங்களிடம் பகிர்ந்துகொள்ளும் தருணம் அலாதியானது.பணிக்குப் போகும் வரை பணிவோடு இருப்பவன். மனிதாபிமானத்தோடும், அறத்தோடும் இருப்பவன், காவல் துறையின் பயிற்சிக்குப் பிறகு எப்படி மாறுகிறான் என்பதுதான் நாம் விவாதிக்கவேண்டிய பகுதிகள். நடைமுறையில் காவல்துறையினர் சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்களாக, தங்களை யாரும் எந்தக் கேள்வியும் கேட்கக் கூடாது என்கிற தொனியில் வெகுஜன விரோதிகளாகவே வெளிப்படுகின்றனர். சமூக விரோதிகள், கயவர்கள், சூதாடிகள், மாஃபியாக்கள் என இந்தத் தேசத்தின் மாண்புகளை பலிகொள்ளும் யாரையும் எதிர்க்க முடியாத நிலையில் காவல்துறையினர் உள்ளனர்.

மேல் அதிகாரிகளின் கட்டளைக்குக் கீழ்பணியும், மனசாட்சியற்ற செயல்களை அடிமை மோகத்தில் செய்யும், அடக்குமுறையை வீரமாகக் கருதும் நிலைக்கு படிப்படியாக வந்துவிடுகின்றனர். பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் தங்களது அதிகார நலன்களுக்காக உருவாக்கிய கட்டமைப்பே அப்படியே சுதந்திர இந்தியாவிலும் எந்த மாற்றமும் இல்லாமல் பயன்படுத்தப்படுகிறது காவல்துறையில். வருடத்தின் 365 நாட்களும் 24 மணிநேரமும் காவல்துறையில் பணியாற்றும் ஒவ்வொருவரும் தங்கள் மேல் அதிகாரிகளின் தொடர்பில் இருந்தாக வேண்டும். அவர்கள் குடும்பத்துக்கென நேரத்தை செலவு செய்ய முடியாது, குடும்பம் மற்றும் உறவினர்களின் விழாக்களில் பங்கெடுக்க முடியாது, நேரத்திற்கு உண்பதும் உறங்குவதும் அவர்களுக்குச் சாத்தியமே இல்லை. உயர் அதிகாரிகளுக்கும் அரசியல் பிரபலங்களுக்கும் கிட்டத்தட்ட அடிமைகள் போல் சேவகம் செய்யவேண்டும். காவல்துறையில் மன அழுத்தம் காரணமாகத் தற்கொலை செய்து கொள்ளும் நிகழ்வுகள் தினசரி செய்திகளாகி வருகின்றன. அரசியல் கட்சி கூட்டங்களுக்கோ, கலவரப் பகுதிகளுக்கோ காவலுக்குச் செல்லும் போது அவர்கள் ஆடு மாடுகளைப்போலத்தான் வாகனங்களில் ஏற்றிச் செல்லப்படுவார்கள். வேலையில் சேரும் போது சினிமாவில் வரும் எஸ்.பி. சௌத்ரி போல கனவுகளோடுதான் வருகின்றனர். பிறகுதான் தான் ஒரு ஆர்டலி என்றும், அதிகார வர்க்கத்தின் அடியாள் என்றும் உணர்கின்றனர். இப்படியான அவமதிப்பிற்காக இவர்கள் மீது யாரும் பரிதாபப்படுவதில்லை. காரணம் லஞ்சத்திற்காக புகாரை மாற்றுவது, புகார்தாரர்களையே குற்றவாளியாக்குவது, பணம் வாங்கிக்கொண்டு குற்றவாளிகளைத் தப்பவைப்பது, காவல் நிலையத்தில் கட்டப்பஞ்சாயத்து செய்வது, ஊரின் முக்கிய பிரமுகர்கள், அரசியல்வாதிகளின் தலையீட்டால் குற்றவாளியை வழக்கிலிருந்து விடுவிப்பது போன்றவை சாதாரண நிகழ்வுகளாக மாறிவிட்டன. புகார் கொடுக்கச் செல்லும் பணமில்லாத மற்றும் பின்புலமில்லாத அப்பாவிகள்; காவல் நிலையங்களில் நடத்தப்படும் விதத்தை விவரித்தால் மனம் பதைத்துவிடும். நமது ஊரில் பிறந்த யாரோ ஒரு விவசாயக் குடும்பத்து பிள்ளைதான் தன் அப்பாவின் வயதொத்த போராடும் ஒரு விவசாயியின் மண்டையை உடைக்கிறான். தன் தங்கை போன்றிருக்கும் உஷாவை ஆய்வாளர் காமராஜின் கால்கள்தான் எட்டி உதைத்து சாகடித்தது.

தூத்துக்குடியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநாட்டில் செம்படை அணிவகுப்பில் முன்பின் தெரியாத, பகை ஏதுமற்ற தன் தம்பிகள் போன்றவர்களை செல்வ நாகரெத்தினத்தின் மரக்கட்டைகள் மண்டைகளை உடைத்தது. மனித உணர்வுகளை மதிக்காத, கட்டளைகளுக்கு பணிகிற எந்திரங்களாக மாற்றப்பட்டுள்ளது காவல்துறை. கொடிகாத்த குமரனைத் தாக்கியபோது ஆங்கிலேய அதிகாரிகளோடு இந்தியர்களான நமது காவலர்களும் தாக்கினார்கள் என்பதும், தண்டியாத்திரையின் போது வெள்ளை அதிகாரிகளின் உதவியாளர்களாக இந்தியச் சிப்பாய்களும் இருந்தார்கள் என்பதும், லாலா லஜபதிராய் மண்டையை வெள்ளைக்கார போலீஸ் உடைக்கும்போது கீழ்நிலைக் காவலர்களாக தடியடியில் ஈடுபட்டவர்கள் இந்தியர்கள் என்பதும் நாம் அறியாத வரலாறல்ல. அப்போது இந்திய உடம்பு, ஏகாதிபத்திய மூளை. இப்போது கூலித் தொழிலாளியின் உடம்பு. அதிகார வர்க்கத்தின் மூளை என தற்போதும் அதே சூழ்ச்சியைத்தான் கட்டவிழ்த்து விடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளது அதிகாரவர்க்கம். துப்பாக்கிக்கும், லத்திக்கும் பயந்து உயிரைக் காப்பாற்றிக்கொள்ள தாமிரபரணி ஆற்றில் குதித்து மாண்டுபோன மாஞ்சோலை விவசாயிகளும் பெண்களும் இழைத்த குற்றம் என்ன? அதிகார வர்க்கத்தின் நலன் காப்பதும், உழைக்கும் வர்க்கத்தின் குரலை அடக்குவதுமாக ரோபோக்களின் மண்டைகளைப்போல் நம் பிள்ளைகளின் மூளைகளில் புரோகிராம்களை எழுதி வடிவமைக்கிறது அதிகாரவர்க்கம். தன் அப்பாவைப்போன்ற வாழ்நிலை அறுபட்ட வயோதிகனை அடிக்கவைக்கிறது. தன் சகோதரிபோன்ற உரிமை கேட்கும் பெண்ணை உதைக்கவைக்கிறது. ஆளும் கட்சியையும், அதிகார வர்க்கத்தையும் திருப்திப்படுத்தும் ஏவல்துறையாக காவல்துறை முற்றிலுமாக மாற்றப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் பழைய கந்தர்வகோட்டையில் பொங்கல் விழாவை முன்வைத்து பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த சில சாதிவெறியர்கள் தலித் தெருவில் நுழைந்து பெண்களையும் ஆண்களையும் ஈவிரக்கமின்றி அடித்துக் காயப்படுத்துகின்றனர். காவல்துறையை வழக்குப் பதியவைக்கவே போராட்டம் நடத்தவேண்டிவந்தது. அதன் பிறகு பிற்படுத்தப்பட்ட பகுதியினரை சமாதானம் செய்வதற்காக தப்பேதும் செய்யாத அப்பாவி தலித்துகள் 11 பேர் மீது வழக்குப் போடுகின்றனர்.

என்ன குற்றம் செய்தனர் என்ற கேள்விக்கு காவல் துணை கண்காணிப்பாளர் சொன்ன பதில், அப்போதுதான் சாதி இந்துக்களை சமாதானப்படுத்த முடியும். கறம்பக்குடியை அடுத்த முதலிபட்டி கிராமத்தில் வயதான மூதாட்டி ஒருவரின் பிணத்தைப் பொதுப்பாதையில் எடுத்துச்சென்றதற்காக தலித் வகுப்பினரை ஊரை விட்டு ஒதுக்கிவிட்டனர். காவல் நிலையத்திற்குப் புகார் செல்கிறது. கடையில் டீ தரமாட்டேன்னா, பொருள் தரமாட்டேன்னா அது அவங்க கடை, அவங்க விருப்பம். அதுக்கு என்ன செய்ய முடியும்’ என்றார் காவல் ஆய்வாளர். இவர்கள் சட்டத்தை படித்துவிட்டுத்தான் காவல்துறையில் பணியாற்றுகிறார்களா என்ற சந்தேகம் நமக்கு ஏற்படுகிறது. பாதிக்கப்பட்டவர்களைப் பாதுகாப்பதும், தவறு செய்தவர்களைத் தண்டிப்பதும் கடமை என்பதற்கு மாறாக சாதியும், வர்க்கமும் ஆளுமை செலுத்தும் பக்கம் நிற்பது காவல்துறையின் கடமையாக போதிக்கப்படுகிறது. இங்கே, சட்டம் புறம் தள்ளப்படுகிறது. ஜனநாயகம் மறுக்கப்படுகிறது. நிலப்பிரபுத்துவத்தின் மிச்ச சொச்சங்களின் கூட்டாளிகளாக காவல் துறை நடத்தப்படுகிறது. காவலர்கள் தங்களது வீரத்தை உழைக்கும் வர்க்கத்திடமும். உரிமைக்காக போராடுபவர்கள் மீதும் காட்டுகின்றனர். காவலர்கள் வானத்தில் இருந்து குதித்து வரவில்லை. அவர்கள் நம் அண்ணன், தம்பி, தங்கை, அப்பா என்பதுதான் நிஜம். தூக்கி அடிப்பதும், துரத்தி விரட்டுவதும், உள்ளே அடைப்பதும் உங்களின் உறவுகளைத்தான். காவல்துறை உங்கள் நண்பன் என்ற வாசகத்தை சகல இடங்களிலும் பொறித்து வைத்தாலும். இன்று வரை எளிதாக அணுகும் துணிச்சல் யாருக்கும் வருவதில்லை. இப்படியே இத்துறை செயல்பட்டால் குற்றங்களையும், குற்றவாளிகளையும் உற்பத்தி செய்யும் கூடாரங்களாக மேலும் வலுப்பெறும் என்பதை மறுப்பதற்கில்லை.

 எஸ்.கவிவர்மன்