Sunday 24 December 2023

கீழ்வெண்மணி

1968 டிசம்பர் 25
🔥கீழ்வெண்மணி துயர வரலாறு.
                                     -எஸ்.கவிவர்மன்
அரைப்படி நெல்மணி அதிகம் கேட்டதால் 44 பேரை உயிரோடு எரித்த ஆதிக்கவர்க்கம்.

'தனக்கு அடிமையாக இருந்தவர்கள் தன்னை எதிர்ப்பதா?' என்று ஆத்திரம் கொண்ட பண்ணையார் கோபாலகிருஷ்ணன் என்பவன், தனது அடியாட்களுடன் பெட்ரோல் கேன்கள், நாட்டுத் துப்பாக்கி சகிதம் வந்திறங்கினான். அவர்களுக்கு போலீசாரும் துணை நின்றனர். அவர்கள் முன்னிலையில் அந்த கொடிய சம்பவத்தை அரங்கேற்றினர். காட்டில் மிருகம் வேட்டையாடப்படுவது போல் கண்ணுக்கு கிடைப்பவர்கள் எல்லாம் சுடப்பட்டனர்.

இப்படி சுடப்பட்டவர்கள் கிட்டத்தட்ட 10 பேருக்கு மேல் இருப்பார்கள். இதனைக்கண்டு பயந்து நாலா மூலைக்கும் சிதறி ஓடி, வாய்க்கால் வரப்புகளில் ஒடி ஒளிந்துகொண்டனர் தொழிலாளர்கள். அனைத்து குடிசைகளும் எரிக்கப்பட்டன. நிராயுதபாணியாக நிற்கும் அப்பாவி பெண்கள், வயதானவர்கள், குழந்தைகள் உயிரைக் காத்துக்கொள்ள தெரு மூலையில் உள்ள ராமையா என்பவரின் சிறிய கூரைவீட்டில் ஓடி ஒளிந்தனர். வெறிபிடித்து அலைந்தவர்கள் அந்த வீட்டை கண்டுபிடித்து வீட்டை வெளியே தாழிட்டு பெட்ரோலை ஊற்றி எரிக்கின்றனர்.

பூட்டிய வீட்டுக்குள் பெரும் அலறல் சத்தம் எழுந்தது. 'ஐயோ, அம்மா ஆ...ஆ....எரியுதே!' என்ற சத்தம் மட்டும் திரும்ப திரும்ப கேட்கிறது. தான் பிழைக்காவிட்டாலும் தன் குழந்தையாவது பிழைக்கட்டும் என்று ஒரு பெண் தன் குழந்தையை தூக்கி எறிகிறார். கொடூரர்கள் குழந்தை என்றும் பாராமல் வெட்டி வீழ்த்தி தீயில் எரித்தனர். வெளிய வர முயற்சித்தவர்களை மறுபடியும் உள்ளே தள்ளினர்.

வெளியில் நின்று அழுத மூன்று பிஞ்சுக் குழந்தைகளையும் தீயின் உள்ளே தள்ளினர். தீயின் கோர நாக்குகளுக்கு சற்று நேரத்தில் 20 பெண்கள், 19 குழந்தைகள், 6 ஆண்கள்  என 44 உயிர்கள் தீக்கிரையானது. ஒரு பெண் தனது மகளையும் சேர்த்து கெட்டியாக அணைத்துக் கொண்டு கருகியிருந்தார்.

இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும்... கீழ்வெண்மணி தியாகிகள் போராடும் அனைவருக்கும் உரமாக இருப்பார்கள்.
 *தியாகிகளைப் போற்றுவோம்...*

*நிலப்பிரபுக்களால் ராமையாவின் குடிசைக்குள் வைத்து எரித்துக் கொள்ளப்பட்டவர்களின் (44) பெயரும் வயதும்.* 

1.தாமோதரன் (1)
2.ஆசைத்தம்பி (10)
3.ராஞ்சியம்மாள் (16)
4.பாப்பா (35)
5.குணசேகரன் (1)
6.ஜெயம் (10)
7.ஆண்டாள் (20)
8.ரத்தினம் (35)
9.செல்வி (3)
10.ஜோதி (10) 11.கனகம்மாள் (25)
12.கருப்பாயி (35)
13. வாசுகி (3)
14.நடராஜன் (10)
15.மாதாம்பாள் (25)
16.முருகன் (40)
17.ராணி (4)
18.வேதவள்ளி (10)
19.வீரம்மாள் (25)
20.சீனிவாசன் (40)
21. நடராஜன் (5)
22.கருணாநிதி (12)
23.அஞ்சலை (45)
24.தங்கையன் (5)
25.சந்திரா (12)
26.சின்னப்பிள்ளை (28)
27.சுந்தரம் (45)
28.வாசுகி (5)
29.சரோஜா (12)
30.ஆச்சியம்மாள் (30)
31.பட்டு (46)
32.ஜெயம் (6)
33.சண்முகம் (13)
34.குஞ்சம்பாள் (35)
35.கருப்பாயி (50)
36.நடராஜன் (6)
37.குருசாமி (15)
38.குப்பம்மாள் (35)
39.காவேரி (50)
40.ராஜேந்திரன் (7)
41.பூமயில் (16)
42.பாக்கியம் (35)
43.சுப்பன் (70)
44.சேது (26)
 வீரவணக்கம்
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

Saturday 12 August 2023

கவிதை

வெட்டுவதுதான் தீர்வென்று நீங்கள் முடிவு செய்துவிட்டால்...

வாழ்வதற்கே வழியில்லை,
என்ன மயிருக்கு இந்த உயிரு..., வெட்டிப்பார்த்துக்கொள்ளலாம்!

"சின்னதுரை போல் படிங்கடான்னு" டீச்சர் சொன்னா
உங்க பெருமையெல்லாம்
வெறுமையா போச்சு வெட்டுறீங்க...

மனுச மூளைக்கு
மாறுங்கடான்னா,
வறுமை மூளைக்காரர்களாகவே வாழ்க்கையெல்லாம் அலையுறீங்க...

ஒரே வெட்டுல ஆட்டைத் துண்டுபோடும்
அய்யனார் சாமியா
சின்னத்துரைகள் மாறினால் 
உங்க வெறிகொண்ட தலையெல்லாம் வீதியில் கிடக்கும்.

நாங்கள் காப்பாற்றிக்கொள்ள எங்களிடம் உசுரைத்தவிர ஒன்னுமில்லை...

வெட்டுவதுதான் தீர்வென்று நீங்கள் முடிவுசெய்துவிட்டால்
வாருங்கள்...,
உங்களிடத்தில்
சாய்க்கவேண்டியது நிறைய இருக்கிறது!?

 எஸ்.கவிவர்மன்

Saturday 24 June 2023

பெண்கள் மீதான பாசிசத்தின் வரம்பற்ற வன்முறைகள் - எஸ்.கவிவர்மன்

பெண்கள் மீதான பாசிசத்தின் வரம்பற்ற வன்முறைகள் - 

இந்திய பன்மைத்தன்மை கேள்விக் குள்ளாகியுள்ள காலக்கட்டத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். பெண்கள், பெண் குழந்தைகளின் மீதான ஒடுக்குமுறைகள், பாலினப் பாகுபாடு கள், கேட்பாரற்ற வன்முறைகள், வன் புணர்வுகள் எல்லை மீறி நடந்து கொண்டி ருக்கின்றன. இந்தியச் சூழல், எதிர்காலத் தின் மீதான அவநம்பிக்கைகளை விதைத்துக் கொண்டிருக்கிறது. பாதுகாக்க வேண்டிய சட்டங்களும் அதிகார அமைப்பு களும், மனுநீதி கோட்பாடுகளுக்குப் பின்னால் பதுங்கிக்கிடக்கின்றன. மக்க ளைப் பாதுகாக்கும் ஜனநாயக அங்கமான நாடாளுமன்றம், சட்டமன்றம், நீதிமன்றங் கள் அரசியல் அமைப்புச் சட்டத்தின் இறை யாண்மையை கொஞ்சம் கொஞ்மாக கைவிடுகிறதோ என்ற அச்சம் சமீபமாக அதிகரித்து வருகிறது. ஜனநாயகப் போராட்டங்களும், முழக் கங்களும் மதிப்பற்று ஒதுக்கப்படுகிறது. பெண்களின் நிலை இந்தியாவில், குறிப்பாக பாஜக ஆளும் மாநிலங்களில் சகிக்கமுடியாத அளவில் எல்லை மீறிய தாக இருக்கிறது. இந்து அடிப்படைவாத அமைப்புகள் பெண் சமூக செயல்பாட்டா ளர்களையும், அரசியல் தலைவர்களை யும், முற்போக்காளர்களையும் பாலின அடிப்படையில் பகிங்கரமாக கொச்சைப் படுத்தும் செயலை பொதுவெளியிலும், சமூக ஊடகங்களிலும் கொஞ்சம் கூட தயக்கமின்றி செய்து வருகின்றனர்.

முகநூலில் செய்யப்படும் இழிவுகள், அவதூறுகள்
ஒரு முற்போக்காளர் சனாதனத்திற்கு எதிராக முகநூலில் ஒரு கருத்தை பதி விட்டார். அதற்கு அடுத்த நாள் அவரின்  நான்கு வயது பெண் குழந்தையின் படத்தை போலி முகநூல் பக்கத்தில் பதி விட்டு, இவளோடு உல்லாசமாக இருக்க என்று, அக்குழந்தையின் அப்பாவுடைய கைபேசி எண்ணில் அழைக்குமாறு சகிக்க முடியாத வக்கிரத்தை வெளிப்படுத்து கின்றனர். இந்த முகநூல் பக்கத்தின் நிலைப்படத்தில் ஆஞ்சநேயர் படம் வைக் கப்பட்டிருந்தது. சனாதன சக்திகளுக்கு எதிராக வலு வாக குரல் எழுப்பும் தமிழகம் அறிந்த பெண்  பேச்சாளர். அவருடைய படத்தைப்போட்டு ‘இவரோடு உறவு வைக்கவேண்டுமா, எனக்கூறி அவரின் கைபேசி எண்ணைப் பதிவிடுகின்றனர். இந்த முகநூல் பக்கத் தின் நிலைப்படம் காவி முண்டாசு, காவிக் கொடியுடன் முதுகுப்புறத்தை காட்டும் ஒரு இளைஞனின் படம் உள்ளது. பொதுவெளியில் துணிச்சலாக இயங் கும் பெண்களை பொதுத்தளத்தில் செயல் படவிடாமல் தடுக்க இழிவுகளையும் அவ தூறுகளையும் தொடர்ந்து செய்துவரும் சங் பரிவாரக் கூட்டங்களின் செயலை இந்து மதத்தின் புனிதத்தை காப்பாற்றுவதாகக் கூறும் எந்த தலைமையும் கண்டிப்ப தில்லை. மாறாக அதை ஆதரித்து வளர்த் தும்விடும் சீரழிவு சக்திகளாக மதஅடிப் படைவாத அமைப்புகளின் செயல்பாடு கள் உள்ளன

பாஜகவின் பெண்களுக்கும்...
சனாதனக் கோட்பாட்டின்படி பெண் என்பவள் அடங்கிக் கிடக்கவேண்டியவள் என்ற கற்பிதத்தை வலுவாக கட்டமைக்க முயல்கின்றனர். ‘கலாச்சாரக் காவலர் கள்’ என்ற போர்வையில் காதல் ஜோடிக ளை தாக்குவது, சாதி, மத மறுப்பு திரு மணங்கள் செய்பவர்களை கொலைகள் செய்வது போன்ற சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இதில் அதிகம் பாதிக்கப்படுப வர்கள் பெண்களாகவே உள்ளனர். பாஜக, ஆர்எஸ்எஸ் அமைப்புகளில் உள்ள பெண்களுக்கும் இதுதான் நிலை. இதற்கு உதாரணம் காயத்ரி ரகுராமனும், டெய்ஸியும். இப்படி ஒரு மோசமான அமைப்பின் தலைமைப் பொறுப்பில் இருந்துகொண்டு குஷ்பு போன்ற பெண்கள் சத்தமாகப் பேசி அரசியல் ஆதாயம் தேடும் செயல் அருவெறுப்பாக உள்ளது.

பயம் ஏற்படுத்தவே’ என பகிரங்க அறிவிப்பு
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் 2008 ஆம் ஆண்டு ஜனவரி 21-ஆம் தேதி நடைபெற்ற கலவரத்தின் போது பில்கிஸ் பானு கும்பல் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். அவரின் குடும்பத்தினர் 14 பேர் கொலை செய்யப்பட்டனர். பில்கிஸ் பானுவின் குடும்பத்தினரின் உடல்கள் எந்த பரிசோதனைக்கும் உட்படுத்தப்படாமல் எரிக்கப்பட்டன. பில்கிஸ் பானு அப்போது ஐந்து மாத கர்ப்பிணி, மேலும் கொல்லப் பட்டவர்களில் பில்கிஸ் பானுவின் மூன்று வயது மகளும் அடங்குவார். இந்தக் கொடு மைக்கு எதிராக நாடே கொந்தளித்தது. ஆனால் இந்து ஏக்தா மஞ்ச் என்ற அமைப்பு குற்றவாளிகளுக்கு ஆதரவாக பேசியதோடு முஸ்லீம்களுக்கு பயம் ஏற் படுத்தவே இந்த சம்பவம் நடத்தப்பட்டது என பகிங்கரமாகவே செய்தி வெளியிட்டு போராட்டம் நடத்தினர்.

கொஞ்சம் கூட மனச்சாட்சியற்று கொலைபாதகச் செயல்களை அரங் கேற்றிய 11 குற்றவாளிகளை தண்டனை காலத்திற்கு முன்பே குஜராத் பாஜக அரசு விடுதலை செய்தது. இந்த விடு தலையை இந்து அமைப்புகளும், பாஜக வும் கொண்டாடின. வஞ்சிக்கப்பட்ட பில்கிஸ் பானுவும் மனச்சாட்சியுள்ள மனி தர்களும் கையறு நிலைக்குத் தள்ளப் பட்டனர்.

கொடூரத்தின் உச்சம்
காஷ்மீரத்தில் உள்ள கத்துவா கிராமத் தில் ஆடு, குதிரை, மாடுகள் மேய்க்கும் குஜ்ஜர் எனப்படும் முஸ்லிம் நாடோடி மேய்ப்பர் சமூகத்தைச் சேர்ந்தவர் யூசூப் புஜ்வாலா, நசீமா பிபி இவர்களின் மகள் எட்டு வயது சிறுமி ஆசீபா. காணாமல் போய் 5 நாட்களுக்குப் பிறகு சிறுமியின் உடல் கண்டிபிடிக்கப்பட்டது. கால், கைகள் உடைந்து, மண்டையோடு சிதைக் கப்பட்டு, உடல் முழுக்க ரத்தமாக, கீறல்க ளுடன், உடல் நீல நிறத்தில் மாறி பிணமாகக்கிடந்தாள். ஏழுபேரை குற்ற வாளிகள் என தனிப்படையின் விசாரணைக் குழு உறுதி செய்தது.  குற்றவாளிகளில் 2 பேர் 18 வயது நிரம் பாதவர்கள், 4 பேர் போலீஸ்காரர்கள், அதில் ஒருவர் ஆசீபா வழக்கை விசாரித்து வரும் தீபக் என்ற காவலர். இவர்கள் அனை வரும் பாஜக, ஆர்.எஸ்.எஸ், இந்துத்துவா அமைப்புகளைச் சேர்ந்தவர்கள். இது பற்றி பேசிய பாஜகவைச் சேர்ந்த ராஜீவ் ஜாஸ்ரோட்டியா, இது அந்த சிறுமியின் குடும்ப விசயம் என்றார். குற்றவாளிகளைக் கைது செய்வதை எதிர்த்து இந்து அமைப்பு நடத்திய பேரணியில் இரண்டு பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்று குற்றவாளிகள் கைதுக்கு எதிராக முழக்கம் எழுப்பினர். பிரதமர் மோடி இதுபற்றி ஒரு வார்த்தைகூடப் பேசாமல் மௌனம் காத்ததை உலகமே வேதனையுடன் பார்த்தது. ஆசீபாவின் உடலை எங்கள் பகுதியில் எரிக்கக்கூடாது என்று பாஜகவின் சார்பு அமைப்புகள் மிரட்டினர். இதனால் 7 கி.மீ தூரம் கொண்டு சென்று அந்த சிறுமி யின் உடலை எரியூட்டினர். ஆசீபா ஒரு மனித உயிராகவே மதிக்கப்படவில்லை. இச்சம்பவம் இந்து மத அடிப்படைவாதி களுக்கு எந்த உறுத்தல்களையும் ஏற்படுத்தவில்லை.

மல்யுத்த மகளிரும் தப்பவில்லை
இந்திய மல்யுத்த வீரர்கள், 2023 ஜனவரி 18-ஆம் தேதி பாலியல் துன்புறுத்தலுக்கு எதிராக போராட்டத்தை முன்னெடுத்தனர். இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் முன்னாள் தலைவரும், பாஜக எம்பியு மான பிரிஜ் பூஷண் சரண் சிங் மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்த நிலையில், அவர் மீது வழக்குப்பதிவு செய்யக் கோரி முன்னணி மல்யுத்த வீராங்கனைகள் வினேஷ் போகத், சாக் ஷி மாலிக், சங்கீதா போகத் மற்றும் மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா உள்ளிட்டோர் தில்லி ஜந்தர் மந்தர் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்ட னர்.  விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாகூரை அவரது வீட்டில் சந்தித்து முறையிட்டனர். இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவர் பி.டி.உஷாவிற்கு கடிதம் எழுதினர். மே-29 அன்று மல்யுத்த வீரர்கள் கைது செய்யப்பட்டதற்கு பலத்த கண்டனங்கள் எழுந்தன. மே-30 தாங்கள் வென்ற பதக்கங்களை கங்கையில் வீசப்போவதாக மல்யுத்த வீரர்கள் அறிவித்து கண்ணீர் மல்க தங்கள் எதிர்ப்புக் குரலை ஊடகங்களில் தெரிவித்தனர். 

பாலியல் குற்றவாளியை பாதுகாக்க மிரட்டும் பாஜக
சர்வதேச மல்யுத்த சம்மேளனம், சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி உள்ளிட்டவை இப்பிரச்சனையை விசாரிக்கும் விதத்தை கேள்வி எழுப்பி கண்டனம் தெரி வித்தது. எத்தனை எதிர்ப்புகள் வந்தாலும் பாலியல் குற்றம் செய்தவர் பாஜக நாடாளு மன்ற உறுப்பினர் என்பதால் அவரைப் பாதுகாக்க வரிந்து கட்டிக்கொண்டு நிற்கி றார்கள். ஒருபடி மேலே போய் போராட் டத்தை வாபஸ் வாங்கச் சொல்லி அமித்ஷா  மிரட்டுகிறார். போராட்டத்தை வாபஸ் பெற்றுவிட்டதாக ஊடகங்களுக்கு அதிகாரப்பூர்வமற்ற செய்தியை பரப்பி போராட்டத்தை மழுங்கடிக்கச் செய்யும் வேலையைச் செய்தனர். இந்தியாவின் பெருமைமிகு மகள்கள் கண்கலங்கி 6 மாதங்களாக தெருவில் நிறுத்தப் பட்டுள்ளனர். முன்னாள் மத்திய அமைச்சர் சின்மயானந்தா சட்டக் கல்லூரி மாணவி கொடுத்த பாலியல் புகாரில் கைது செய்யப்பட்டார். உச்ச நீதிமன்றம் தலை யிட்டு நேரில் ஆஜராக வேண்டும் என்று வலியுறுத்தியது. அதன் பிறகு  சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டது. அந்த புலனாய்வுக் குழு அவரை கைது செய்தது. நீதிமன்ற நடவடிக்கையால் இது சாத்தியமாக்கப்பட்டது.  இப்படியான வன்முறைகள் வரம் பின்றி நடைபெறுவது அதிகரித்துள்ளது. மதிக்கப்படவேண்டிய பெண்ணினம் அவமதிக்கப்படுகிறது. மனித சமூகத் தில் முதன்முதலில் ஒடுக்கப்பட்ட பகுதியி னராக இருந்தவர்கள் பெண்கள்தான் என்பது முந்தைய வரலாறு. காலச்சக்க ரத்தை பின்னோக்கிச் செலுத்தும் பிற் போக்கு சக்திகளை சாக் ஷி மாலிக், சங்கீதா போகத் போன்ற பெண்சக்திகள் முறிய டிக்கும் என்பது எதிர்கால வரலாறாகும்.

Thursday 13 April 2023

நண்பனாக செயல்படுமா காவல்துறை?

நண்பனாக செயல்படுமா காவல்துறை?
சுய விருப்பு வெறுப்பிற்கும், அரசு அதிகாரத்தின் ஏவலுக்கும் அடிபணியும் காவல்துறையில் பணியாற்றும் யாவருக்குமான கடிதம் இது. வேலை தேடித் திரிந்து, எந்த வேலை கிடைத்தாலும் சரி என முயற்சிசெய்யும் போது காவல்துறையில் சிலருக்கு வேலை கிடைக்கிறது. குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டுமென்ற வேட்கையோடு செல்லும் ஒரு கூலித் தொழிலாளி, ஒரு விவசாயக் குடும்பத்திலிருந்து வரும் அன்பும் அறனும் பெற்ற இளைஞன்தான் காக்கி உடைக்குள் கம்பீரமாக மிளிர்கிறான். காலில் சேற்றை அப்பியபடி கலப்பையோடும், கதிர் அறுத்த அரிவாளோடும் அம்மாவும் அப்பாவும் தம்பிக்கு போலீஸ்ல வேலை கிடைச்சிருக்கு என்று தன் மகிழ்ச்சியைத் தன் சொந்த பந்தங்களிடம் பகிர்ந்துகொள்ளும் தருணம் அலாதியானது.பணிக்குப் போகும் வரை பணிவோடு இருப்பவன். மனிதாபிமானத்தோடும், அறத்தோடும் இருப்பவன், காவல் துறையின் பயிற்சிக்குப் பிறகு எப்படி மாறுகிறான் என்பதுதான் நாம் விவாதிக்கவேண்டிய பகுதிகள். நடைமுறையில் காவல்துறையினர் சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்களாக, தங்களை யாரும் எந்தக் கேள்வியும் கேட்கக் கூடாது என்கிற தொனியில் வெகுஜன விரோதிகளாகவே வெளிப்படுகின்றனர். சமூக விரோதிகள், கயவர்கள், சூதாடிகள், மாஃபியாக்கள் என இந்தத் தேசத்தின் மாண்புகளை பலிகொள்ளும் யாரையும் எதிர்க்க முடியாத நிலையில் காவல்துறையினர் உள்ளனர்.

மேல் அதிகாரிகளின் கட்டளைக்குக் கீழ்பணியும், மனசாட்சியற்ற செயல்களை அடிமை மோகத்தில் செய்யும், அடக்குமுறையை வீரமாகக் கருதும் நிலைக்கு படிப்படியாக வந்துவிடுகின்றனர். பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் தங்களது அதிகார நலன்களுக்காக உருவாக்கிய கட்டமைப்பே அப்படியே சுதந்திர இந்தியாவிலும் எந்த மாற்றமும் இல்லாமல் பயன்படுத்தப்படுகிறது காவல்துறையில். வருடத்தின் 365 நாட்களும் 24 மணிநேரமும் காவல்துறையில் பணியாற்றும் ஒவ்வொருவரும் தங்கள் மேல் அதிகாரிகளின் தொடர்பில் இருந்தாக வேண்டும். அவர்கள் குடும்பத்துக்கென நேரத்தை செலவு செய்ய முடியாது, குடும்பம் மற்றும் உறவினர்களின் விழாக்களில் பங்கெடுக்க முடியாது, நேரத்திற்கு உண்பதும் உறங்குவதும் அவர்களுக்குச் சாத்தியமே இல்லை. உயர் அதிகாரிகளுக்கும் அரசியல் பிரபலங்களுக்கும் கிட்டத்தட்ட அடிமைகள் போல் சேவகம் செய்யவேண்டும். காவல்துறையில் மன அழுத்தம் காரணமாகத் தற்கொலை செய்து கொள்ளும் நிகழ்வுகள் தினசரி செய்திகளாகி வருகின்றன. அரசியல் கட்சி கூட்டங்களுக்கோ, கலவரப் பகுதிகளுக்கோ காவலுக்குச் செல்லும் போது அவர்கள் ஆடு மாடுகளைப்போலத்தான் வாகனங்களில் ஏற்றிச் செல்லப்படுவார்கள். வேலையில் சேரும் போது சினிமாவில் வரும் எஸ்.பி. சௌத்ரி போல கனவுகளோடுதான் வருகின்றனர். பிறகுதான் தான் ஒரு ஆர்டலி என்றும், அதிகார வர்க்கத்தின் அடியாள் என்றும் உணர்கின்றனர். இப்படியான அவமதிப்பிற்காக இவர்கள் மீது யாரும் பரிதாபப்படுவதில்லை. காரணம் லஞ்சத்திற்காக புகாரை மாற்றுவது, புகார்தாரர்களையே குற்றவாளியாக்குவது, பணம் வாங்கிக்கொண்டு குற்றவாளிகளைத் தப்பவைப்பது, காவல் நிலையத்தில் கட்டப்பஞ்சாயத்து செய்வது, ஊரின் முக்கிய பிரமுகர்கள், அரசியல்வாதிகளின் தலையீட்டால் குற்றவாளியை வழக்கிலிருந்து விடுவிப்பது போன்றவை சாதாரண நிகழ்வுகளாக மாறிவிட்டன. புகார் கொடுக்கச் செல்லும் பணமில்லாத மற்றும் பின்புலமில்லாத அப்பாவிகள்; காவல் நிலையங்களில் நடத்தப்படும் விதத்தை விவரித்தால் மனம் பதைத்துவிடும். நமது ஊரில் பிறந்த யாரோ ஒரு விவசாயக் குடும்பத்து பிள்ளைதான் தன் அப்பாவின் வயதொத்த போராடும் ஒரு விவசாயியின் மண்டையை உடைக்கிறான். தன் தங்கை போன்றிருக்கும் உஷாவை ஆய்வாளர் காமராஜின் கால்கள்தான் எட்டி உதைத்து சாகடித்தது.

தூத்துக்குடியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநாட்டில் செம்படை அணிவகுப்பில் முன்பின் தெரியாத, பகை ஏதுமற்ற தன் தம்பிகள் போன்றவர்களை செல்வ நாகரெத்தினத்தின் மரக்கட்டைகள் மண்டைகளை உடைத்தது. மனித உணர்வுகளை மதிக்காத, கட்டளைகளுக்கு பணிகிற எந்திரங்களாக மாற்றப்பட்டுள்ளது காவல்துறை. கொடிகாத்த குமரனைத் தாக்கியபோது ஆங்கிலேய அதிகாரிகளோடு இந்தியர்களான நமது காவலர்களும் தாக்கினார்கள் என்பதும், தண்டியாத்திரையின் போது வெள்ளை அதிகாரிகளின் உதவியாளர்களாக இந்தியச் சிப்பாய்களும் இருந்தார்கள் என்பதும், லாலா லஜபதிராய் மண்டையை வெள்ளைக்கார போலீஸ் உடைக்கும்போது கீழ்நிலைக் காவலர்களாக தடியடியில் ஈடுபட்டவர்கள் இந்தியர்கள் என்பதும் நாம் அறியாத வரலாறல்ல. அப்போது இந்திய உடம்பு, ஏகாதிபத்திய மூளை. இப்போது கூலித் தொழிலாளியின் உடம்பு. அதிகார வர்க்கத்தின் மூளை என தற்போதும் அதே சூழ்ச்சியைத்தான் கட்டவிழ்த்து விடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளது அதிகாரவர்க்கம். துப்பாக்கிக்கும், லத்திக்கும் பயந்து உயிரைக் காப்பாற்றிக்கொள்ள தாமிரபரணி ஆற்றில் குதித்து மாண்டுபோன மாஞ்சோலை விவசாயிகளும் பெண்களும் இழைத்த குற்றம் என்ன? அதிகார வர்க்கத்தின் நலன் காப்பதும், உழைக்கும் வர்க்கத்தின் குரலை அடக்குவதுமாக ரோபோக்களின் மண்டைகளைப்போல் நம் பிள்ளைகளின் மூளைகளில் புரோகிராம்களை எழுதி வடிவமைக்கிறது அதிகாரவர்க்கம். தன் அப்பாவைப்போன்ற வாழ்நிலை அறுபட்ட வயோதிகனை அடிக்கவைக்கிறது. தன் சகோதரிபோன்ற உரிமை கேட்கும் பெண்ணை உதைக்கவைக்கிறது. ஆளும் கட்சியையும், அதிகார வர்க்கத்தையும் திருப்திப்படுத்தும் ஏவல்துறையாக காவல்துறை முற்றிலுமாக மாற்றப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் பழைய கந்தர்வகோட்டையில் பொங்கல் விழாவை முன்வைத்து பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த சில சாதிவெறியர்கள் தலித் தெருவில் நுழைந்து பெண்களையும் ஆண்களையும் ஈவிரக்கமின்றி அடித்துக் காயப்படுத்துகின்றனர். காவல்துறையை வழக்குப் பதியவைக்கவே போராட்டம் நடத்தவேண்டிவந்தது. அதன் பிறகு பிற்படுத்தப்பட்ட பகுதியினரை சமாதானம் செய்வதற்காக தப்பேதும் செய்யாத அப்பாவி தலித்துகள் 11 பேர் மீது வழக்குப் போடுகின்றனர்.

என்ன குற்றம் செய்தனர் என்ற கேள்விக்கு காவல் துணை கண்காணிப்பாளர் சொன்ன பதில், அப்போதுதான் சாதி இந்துக்களை சமாதானப்படுத்த முடியும். கறம்பக்குடியை அடுத்த முதலிபட்டி கிராமத்தில் வயதான மூதாட்டி ஒருவரின் பிணத்தைப் பொதுப்பாதையில் எடுத்துச்சென்றதற்காக தலித் வகுப்பினரை ஊரை விட்டு ஒதுக்கிவிட்டனர். காவல் நிலையத்திற்குப் புகார் செல்கிறது. கடையில் டீ தரமாட்டேன்னா, பொருள் தரமாட்டேன்னா அது அவங்க கடை, அவங்க விருப்பம். அதுக்கு என்ன செய்ய முடியும்’ என்றார் காவல் ஆய்வாளர். இவர்கள் சட்டத்தை படித்துவிட்டுத்தான் காவல்துறையில் பணியாற்றுகிறார்களா என்ற சந்தேகம் நமக்கு ஏற்படுகிறது. பாதிக்கப்பட்டவர்களைப் பாதுகாப்பதும், தவறு செய்தவர்களைத் தண்டிப்பதும் கடமை என்பதற்கு மாறாக சாதியும், வர்க்கமும் ஆளுமை செலுத்தும் பக்கம் நிற்பது காவல்துறையின் கடமையாக போதிக்கப்படுகிறது. இங்கே, சட்டம் புறம் தள்ளப்படுகிறது. ஜனநாயகம் மறுக்கப்படுகிறது. நிலப்பிரபுத்துவத்தின் மிச்ச சொச்சங்களின் கூட்டாளிகளாக காவல் துறை நடத்தப்படுகிறது. காவலர்கள் தங்களது வீரத்தை உழைக்கும் வர்க்கத்திடமும். உரிமைக்காக போராடுபவர்கள் மீதும் காட்டுகின்றனர். காவலர்கள் வானத்தில் இருந்து குதித்து வரவில்லை. அவர்கள் நம் அண்ணன், தம்பி, தங்கை, அப்பா என்பதுதான் நிஜம். தூக்கி அடிப்பதும், துரத்தி விரட்டுவதும், உள்ளே அடைப்பதும் உங்களின் உறவுகளைத்தான். காவல்துறை உங்கள் நண்பன் என்ற வாசகத்தை சகல இடங்களிலும் பொறித்து வைத்தாலும். இன்று வரை எளிதாக அணுகும் துணிச்சல் யாருக்கும் வருவதில்லை. இப்படியே இத்துறை செயல்பட்டால் குற்றங்களையும், குற்றவாளிகளையும் உற்பத்தி செய்யும் கூடாரங்களாக மேலும் வலுப்பெறும் என்பதை மறுப்பதற்கில்லை.

 எஸ்.கவிவர்மன்

Wednesday 8 March 2023

ரோகித் வெமுலா பாடுகொலைக்கு நீதி வேண்டும்.


எஸ்.கவிவர்மன் (மீள்)
ரோகித் வெமுலா பாடுகொலைக்கு நீதி வேண்டும்.
ரோஹித்தின் கடைசி வரிகள்
வணக்கம்.நீங்கள் இந்தக் கடிதத்தை படிக்கும் பொழுது நான் உங்களுடன் இருக்க மாட்டேன். எனக்காக பலர் அக்கறையுடன் இருந்தீர்கள், என்னை தாங்கினீர்கள், என்னை விரும்பினீர்கள்என்பது எனக்கு தெரியும். யார் மீதும் எனக்கு குறை இல்லை. என்னிடம் தான் பல பிரச்சனைகள் இருந்துள்ளன. என் உடலுக்கும் ஆன்மாவுக்கும் இடையே உள்ள இடைவெளி வளர்ந்துக் கொண்டே போவதை நான் காண்கிறேன். நான் ஒரு அசுரன் போல் மாறிவிட்டேன். ஒரு எழுத்தாளராகத்தான் நான் எப்பொழுதும் நினைத்திருந்தேன். கார்ல் சாகன் போல் அறிவியலை எழுத வேண்டும் என நினைத்தேன். ஆனால், என்னால் எழுத முடிந்தது இந்த கடிதத்தை மட்டுமே.எனக்கு அறிவியல், நட்சத்திரங்கள்,இயற்கையை பிடிக்கும். இயற்கையுடன் வெகு நாட்களுக்கு முன்னரே தொடர்பை துண்டித்துக் கொண்டவர்களுடனும் நான் பழகியிருக்கிறேன். நம்முடைய உணர்வுகள் இரண்டாம் பட்சமாக மாறிவிட்டன. நம்முடைய அன்பு கட்டப்பட்டு விட்டன. நம்முடைய நம்பிக்கைகளின் மேல் சாயம் பூசப்பட்டு விட்டன. செயற்கையான கலைகள் மூலமாகத்தான் நம்முடைய உண்மையான செயல்கள் மதிக்கப்படுகின்றன. வலியில்லாமல் காதலை பெறுவது அரிதாகி விட்டது.உடனடியாக அடையாளமும் வாய்ப்பும் கிடைப்பதற்காக நம்முடைய குணங்கள் அழிக்கப்பட்டு விட்டன.ஓட்டுக்களுக்காக, எண்களுக்காக, பொருள்களுக்காக,மனிதன் மனிதனாக பார்க்கப்படுவதில்லை. எல்லா துறைகளிலும், கல்வி பிரிவுகளிலும், தெருக்களிலும், அரசியலிலும், வாழ்தலிலும், சாதலிலும் இப்படித்தான் நிகழ்கின்றன.இப்படியொரு கடிதத்தை நான் முதல்முறையாக எழுதுகிறேன். முதல்முறையாக என்னுடைய கடைசி கடிதத்தைதான் நான் எழுதுகிறேன்.நான் உங்கள் உணர்வுகளை காயப்படுத்திஇருந்தால் என்னை மன்னித்து விடுங்கள்.இந்த உலகத்தை புரிந்துக் கொள்வதில் நான் தவறு செய்திருக்கலாம். காதல், வலி, வாழ்க்கை, இறப்பு ஆகியவற்றை புரிந்து கொள்வதில் கூட நான் தவறு இழைத்திருக்கலாம். எந்தவொரு அவசரமும் இல்லை. ஆனால், எனக்கு அவசரம்ஏற்பட்டுள்ளது. கடினப்பட்டு வாழ்க்கையை பயணிக்க முடியவில்லை. நிறைய பேருக்கு வாழ்க்கை சாபமாகத்தான் இருந்துள்ளது. என் வாழ்க்கை ஒரு அபாயகரமான விபத்து. என் குழந்தை கால தனிமை வாழ்க்கையை என்னால் திரும்பி மீட்க இயலாது. ஊக்கப்படுத்த முடியாத ஒரு குழந்தையாக நான் இருந்துள்ளேன்.நான் இந்த தருணத்தில் யாரையும் காயப்படுத்த முடியவில்லை. நான் வருத்தமாக இல்லை. நான் வெற்றிடமாக உள்ளேன். என்னைப்பற்றி நான் நினைக்கவில்லை. அதுதான் பரிதாபமாக உள்ளது. அதனால்தான் நான் இதை செய்கிறேன்.மக்கள் என்னை கோழை என நினைக்கலாம். நான் போனபின்பு என்னை முட்டாள், சுயநலவாதி என கூட நினைக்கலாம். அதைப்பற்றி எனக்கு கவலை இல்லை. பேய், பிசாசு ஆகியவற்றில் எனக்கு நம்பிக்கை இல்லை. ஆனால், நட்சத்திரங்களுக்கிடையில் பயணிப்பேன் என்பதில் மட்டும் எனக்குநம்பிக்கை உண்டு. மற்ற உலகங்களை பற்றியும் எனக்கு தெரியும்.எனக்காக நீங்கள் ஏதாவது செய்ய வேண்டும் என நினைத்தால் இதை மட்டும் செய்யுங்கள். எனக்கு 7 மாத உதவித்தொகையாக 1,75,000 வர வேண்டும். அதை மட்டும் என் குடும்பத்துக்குவாங்கிக் கொடுத்து விடுங்கள். ராம்ஜிக்கு 40,000 தர வேண்டும். அவர் எப்பொழுதும் அதைத் திருப்பிக் கேட்டதில்லை. ஆனால், தயவு செய்து அதையும் திருப்பிக் கொடுத்து விடுங்கள்.என்னுடைய இறுதிச்சடங்கு சுமூகமாக, அமைதியாக நடக்கட்டும். நான் தோன்றி மறைந்துவிட்டேன்என நினைத்துக் கொள்ளுங்கள். எனக்காக கண்ணீர் வடிக்காதீர்கள்.நான் வாழ்வதை விட சாவதில் சந்தோஷம் அடைகிறேன்.‘நிழலில் இருந்து நட்சத்திரங்கள் வரை’உங்கள் அறையை இதற்காக பயன்படுத்துவதற்கு என்னை மன்னித்துவிடுங்கள் உமா அண்ணா.அம்பேத்கர் மாணவர் சங்கம் என்னை மன்னித்து விடுங்கள். நீங்கள் அனைவரும் என்னை விரும்பினீர்கள். உங்களை ஏமாற்றியதற்கு மன்னியுங்கள்.உங்கள் வருங்காலம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்.கடைசியாக ஒருமுறை,ஜெய்பீம்.வழக்கமாக தற்கொலை செய்து கொள்பவர்கள் சொல்வதை எழுத மறந்து விட்டேன். என் சாவுக்கு யாரும் காரணம் இல்லை. யாரும் அவ்ர்களுடைய வார்த்தைகளாலோ, செயல்களினாலோ, இந்த செயலை செய்யும்படி என்னைத் தூண்டவில்லை. இது என் முடிவு. நான்தான் இதற்கு காரணம். இந்த சம்பவத்திற்கு பின் என் நண்பர்களுக்கும்எதிரிகளுக்கும் எந்த தொந்தரவையும் தர வேண்டாம் " . . .